வாக்காளர் பட்டியலில் வெளிமாநிலத்தவர்கள்

தமிழக சட்டசபை தேர்தலில் பீகார் உள்பட பல வெளிமாநில வாக்காளர்கள் ஓட்டுபோடுவதற்கான வாசல் திறந்து விட்டது.
சட்டசபை தேர்தலை காணப்போகும் பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்து இருக்கிற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக பெரும் சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த பணியின்போது, 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் தங்கள் குடியுரிமைக்கு அத்தாட்சியாக பிறப்பு சான்றிதழ் உள்பட 11 சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையையும் ஏற்று கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த சூழ்நிலையில், கடந்த 1-ந்தேதி திருத்தப்பட்ட சிறப்பு தீவிர வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சம் பெயர்களை காணவில்லை. அவர்கள் வேண்டும் என்றே நீக்கப்பட்டுள்ளனர் என்று அரசியல் கட்சிகள் புகார்கள் தெரிவித்தன. ஆனால் தேர்தல் ஆணையம், நீக்கப்பட்டட 65 லட்சம் பேரில் 22 லட்சம் பேர் உயிரிழந்து விட்டனர். 7 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயர்களை சேர்த்து இருந்தனர். ஒரு லட்சம் பேர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியது. மேலும் 35 லட்சம் பேர் பீகாரை விட்டு இடம் மாறி சென்றுவிட்டனர் என்று தெரிவித்தது.
இடம் மாறியவர்கள் என்ற காரணத்தை சொல்லி இவ்வளவு பெயர்களை நீக்கி இருப்பதால் எழுந்துள்ள சர்ச்சைக்கு மத்தியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஒரு குண்டை தூக்கி போட்டார். அதாவது நீக்கப்பட்டுள்ள 35 லட்சம் பேரும் அதிகளவில் குடிபெயர்ந்து இருப்பது தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மராட்டிய மாநிலத்தில் தான். அந்த அடிப்படையில் அவர்களில் சுமார் 6.5 லட்சம் பேர், தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்து வந்து இருப்பார்கள். அங்கு அவர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதால், அவர்களின் பெயர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சிதம்பரம் தெரிவித்தார். இதே கருத்தை கூறி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, பிரிவு 19 மற்றும் 20-ல் ஒருவர் நாட்டின் எந்த தொகுதியில் வழக்கமாக வசிக்கிறார்களோ? அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்து அங்கு வாக்களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் பூத் மட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேசும்போது, பீகாரை சேர்ந்த ஒருவருக்கு பீகாரில் வீடு இருந்தாலும் அவர் டெல்லியில் வசித்தால் டெல்லியில் தான் அவர் வாக்களிக்க தகுதி உடையவர் ஆவார் என்று உறுதிப்பட கூறியிருக்கிறார். அதுபோல ப.சிதம்பரத்துக்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், பீகாரை சேர்ந்த ஒருவர் சென்னையில் வசிப்பவராக இருந்தால் அவருடைய பெயர் சென்னையில்தான் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படும் என்று தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளது. இந்த அடிப்படையில்தான் டெல்லியில் வசிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அங்கு வாக்களித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று பட்டவர்த்தனமாக கூறியுள்ளது. ஆக வரப்போகும் தமிழக சட்டசபை தேர்தலில் பீகார் உள்பட பல வெளிமாநில வாக்காளர்கள் ஓட்டுபோடுவதற்கான வாசல் திறந்து விட்டது.






