தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு வராது!


தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு வராது!
x

ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்தாக இருப்பது மின்சார உற்பத்திதான். ஒருபக்கம் அனைத்து வீடுகளிலும் மின்சாரம் என்பதை இலக்காகக்கொண்டு மத்திய-மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன. தொழில் வளர்ச்சிக்கும் மின்சாரமே அடிப்படை தேவையாகும். தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களின் முதல் கேள்வியே தடையில்லாத மின்சாரம் உங்கள் மாநிலத்தில் கிடைக்குமா? என்பதுதான். இந்த கேள்விக்கு சாதகமான பதில் கிடைப்பதால்தான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அமைக்க தேடிவருகிறார்கள். தமிழக அரசும் மின்சார உற்பத்தியைப் பெருக்க மிக தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலக நாடுகளும் பசுமை எரிசக்தியில் அதிக அக்கறை காட்டிவருகிறது. அதாவது, அனல் மின்சார நிலையங்களை தொடங்கினால் நிலக்கரி தட்டுப்பாடு ஒரு பக்கம் இருந்தாலும், சுற்றுச்சூழல் மாசினாலும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. நிலக்கரிக்காகவும் வெளிமாநிலங்களையும், வெளிநாடுகளையும் சார்ந்து இருக்கவேண்டிய நிலையும் இருக்கிறது. ஆனால் பசுமை எரிசக்தி அதாவது சூரிய வெப்பத்தினால் மின்சார உற்பத்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியினால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லை, இயற்கையின் அருட்கொடையால் அதிக செலவில்லாமல் மின்சார உற்பத்தியும் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் நல்ல வேளையாக காற்றுக்கும் பஞ்சமில்லை, சூரிய வெப்பத்துக்கும் பஞ்சமில்லை. பருவ காலங்களில் காற்று அதிகமாக வீசுகிறது. சூரிய வெப்பமும் வெயில் காலங்களில் மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் தாராளமாக கிடைக்கிறது. இதை பயன்படுத்தி தமிழக அரசு தனியாரை ஊக்குவித்து மானியம் மற்றும் சலுகைகளை அளித்து சூரிய வெப்பத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை தொடங்கிவருகிறது. அந்தவகையில், சமீபத்தில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் பூங்காவில் உலக புகழ்பெற்ற இந்திய குழுமமான டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் நிறுவனம் ரூ.3,800 கோடி முதலீட்டில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 4 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரத்தை சூரிய வெப்பம் மூலம் உற்பத்தி செய்யும் ஆலையை அமைத்துள்ளது.

இந்த ஆலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த ஆலையில் பணிபுரிபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். இந்த ஆலையை சுற்றி 100 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் பெண்கள் இந்த ஆலையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இப்போது 4,300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இந்த ஆலையில் எதிர்காலத்தில் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று டாடா நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த ஆலைக்காக 4-7-2022-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, 20-10-2022-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகளில் திறந்தும் வைக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த ஆலை மட்டுமல்லாமல் அதே கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.2,574 கோடி செலவில் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் ஆலைக்காகவும் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த ஆலைகளெல்லாம் மின்சார உற்பத்தியை முழுவீச்சில் தொடங்கியபிறகு தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடும் வராது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி புலிப்பாய்ச்சலாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

1 More update

Next Story