20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என சொல்லப்பட்டது. ஆனால் வானிலை அமைப்பு நிலப்பரப்பு அருகில் வரும்போது வலுவடைவதில் பிரச்சினை ஏற்பட்டு, அதன் அமைப்பும், மழைக்கான கணிப்பும் மாறிப்போனது.
இதனால் வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. வானிலை அமைப்பு மாறியதால், நேற்று பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






