தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக தென் தமிழகம், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிலும் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் மாலை 4 மணி வரை 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.