காக்கிநாடா அருகே இன்று கரையை கடக்கும் ‘மோந்தா’ புயல்; எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

‘மோந்தா’ புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகில் கரையை கடக்க உள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 26-ந்தேதி இரவு ‘மோந்தா’ புயல் நிலவியது. நேற்று காலை 11.30 மணி அளவில் 17 கிலோ மீட்டர் வேகத்தில் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக சென்னைக்கு கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இது தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே இன்று காலை அல்லது மாலை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது, 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மேலும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.எனவே அங்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டுக்கு இடைப்பட்ட பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.வருகிற நாட்களில் வட தமிழ்நாடு கடல் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வட தமிழக கடற்கரையோர மாவட்டங்களுக்கு தரைக்காற்று 30 முதல் 35 கி.மீ. வரையில் வீசும். அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். அதேபோல், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கோவை மாவட்ட புறநகர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை சென்னை வானிலை மைய தலைவர் அமுதா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறினார்.






