இத்தனை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பா? : மக்களே உஷார்

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை,
தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னையில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை கொட்டி தீர்த்துள்ளது. அதன்படி, சென்னையில் அண்ணா சாலை, செண்ட்ரல், எழும்பூர், சேத்துப்பட்டு, புதுப்பேட்டை, மைலாப்பூர், தி.நகர், அடையாறு, நுங்கம்பாக்கம் உள்பட மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்கத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.






