‘நிவர்’ புயலை ஞாபகப்படுத்த இருக்கும் ‘மோந்தா’

புயல் நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு ‘மோந்தா' என பெயரிடப்பட்டு இருக்கிறது. பசிபிக் உயர் அழுத்த பிடியால் மேற்கு - வடமேற்கு திசையில் இன்று இரவு புயல் நகரத்தொடங்கும். பின்னர், இமயமலையில் இருக்கக்கூடிய மேற்கத்திய தாழ்வு நிலை புயலை தன்பக்கமாக இழுக்கும்.
இந்த இருவேறு வானிலை நிகழ்வுகளால், வளிமண்டலத்தில் காற்று முறிவு ஏற்பட்டு வடக்கு - வடமேற்கு திசையில் ஆந்திராவின் காக்கிநாடாவை நோக்கி தீவிர புயலாக நகரும். ஆந்திர கடலோரப் பகுதிகளில் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடாவுக்கு அருகில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவாகிய ‘நிவர்’ புயல், மாமல்லபுரத்துக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் தீவிர புயலாக கரையை கடந்தது. அந்த நேரத்தில் கடலூர் - விழுப்புரம் இடையே 6 மணி நேரத்தில் 33 செ.மீ. மழையை கொட்டியது. அதேபோல்தான், வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவை நோக்கி செல்லும் ‘மோந்தா’ புயலும் ஓங்கோல்-நெல்லூர் இடையே குறுகிய நேரத்தில் அதி கனமழை பெய்ய இருக்கிறது. ‘மோந்தா’ புயலில் நடக்கும் காற்று முறிவு நிகழ்வும் நிவர் புயலின்போது நடந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த குறுகிய நேரத்தில் அதி கனமழை கடைசி நேரத்தில் இடம் மாறவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி மாறும்பட்சத்தில் தமிழகத்தில் வடமாவட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் மழை கொட்டவும் ஒரு வாய்ப்புள்ளது. இது புயல் வடமாவட்டங்களை நெருங்கிவரும் நேரத்தில்தான் கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.






