முன்கூட்டியே உருவாகிறது புயல்; வானிலை ஆய்வு மையம் தகவல்

புயலை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுடெல்லி,
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்தது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடையும்.
சென்னைக்கு தென்கிழக்கில் 790 கி.மீ., ஆந்திர பிரதேசத்திற்கு தென்கிழக்கில் 850 கி.மீ. தொலைவில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடாவில் இருந்து தென்கிழக்கே 840 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் இருந்து தெற்கு தென்கிழக்கே 950 கி.மீ. தொலைவிலும் அது மையமிட்டு உள்ளது.
அது, தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 27-ந்தேதி (நாளை) காலை வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதியில் புயலாக மாறி, 28-ந்தேதி (நாளை மறுநாள்) காலை வடமேற்கே நகர்ந்து, பின்னர் வடக்கு வடமேற்கே நகர கூடும். அதன்பின்னர் தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
புயல் நாளை உருவாகும் என கணிக்கப்பட்டு இருந்த சூழலில், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை 5.30 மணிக்கு புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. இதற்கு ஏற்கனவே அட்டவணையில் தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து அது வடக்கு வடமேற்கே நகர்ந்து, ஆந்திர பிரதேசத்தின் மசிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் பகுதிகளுக்கு இடையே வருகிற 28-ந்தேதி அன்று மாலை அல்லது இரவில் காக்கிநாடா அருகே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழையும், நாளை மறுதினம் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் உருவாக உள்ளதையடுத்து தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. இதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த 6 மணிநேரத்தில் புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்காக நகர்ந்து வருகிறது. புயலை முன்னிட்டு, அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மீனவர்கள் கரைக்கு திரும்பும்படி முன்பே அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. புயலை எதிர்கொள்வதற்காக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.






