நைஜீரியா: பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளில் 130 பேரை அதிரடியாக மீட்ட ராணுவம்

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.
அபுஜா,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் 'பண்டிட்ஸ்' என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. சமீப நாட்களாக நைஜீரியாவில் பள்ளிக்குழந்தைகள், பொதுமக்களை ஆயுத கும்பல்கள் கடத்தி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனிடையே, அந்நாட்டின் நைஜர் மாகாணம் பம்பிரி நகரில் உள்ள பள்ளிக்கூடத்திற்குள் கடந்த மாதம் 21ம் தேதி துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ஆசியரிகள், மாணவ, மாணவியர் என 315 பேரை கடத்தி சென்றனர். இதையடுத்து, கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளை மீட்க ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இதில் பயங்கரவாதிகளிடமிருந்து 50 பள்ளிக்குழந்தைகள் தப்பினர். பின்னர், இம்மாத தொடக்கத்தில் 101 குழந்தைகளை பயங்கரவாதிகள் விடுதலை செய்தனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளில் 130 பேரை ராணுவம் நேற்று அதிரடியாக மீட்டுள்ளது. எஞ்சிய 30க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகளின் நிலை குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, பள்ளிக்குழந்தைகள் யாரும் பணய கைதிகளாக இல்லை என்று அதிபர் பயோ தெரிவித்துள்ளார்.






