அபுதாபி இந்து கோவிலில் அமீரகத்தை சேர்ந்த ஆட்டிச குறைபாடுடைய சிறுவனின் பியானோ இசை நிகழ்ச்சி

அமீரகத்தை சேர்ந்த சிறுவன் இந்து கோவிலில் பியானோ வாசித்தது நல்லிணக்கத்தின் பிரதிபலிப்பாக இருந்தது என பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
அபுதாபி,
அமீரகத்தை சேர்ந்த சிறுவன் அகமது அல் ஹாஷெமி (15 வயது). இவர் ஆட்டிச குறைபாடுடையவர். இருப்பினும் இசையின் மீதுள்ள ஆர்வத்தால் பியானோ கருவியை முறைப்படி வாசிக்க கற்றுக்கொண்டார். இதுவரை சிறுவன் அகமது 9 நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் அமீரகத்தின் சார்பில் பங்கேற்றுள்ளார். சிறுவனின் முயற்சி பாரிஸ் நகரில் யுனெஸ்கோவின் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. இவர் அன்னை தெரசா விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இவர் இந்து கோவிலை பார்வையிட வருகை புரிந்துள்ளார். அப்போது அங்கு இருந்த அமைதி, அன்பான வரவேற்பால் ஈர்க்கப்பட்டு அபுதாபி இந்து கோவிலில் தனது பியானோ இசையை வாசிக்க வேண்டும் என ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட பி.ஏ.பி.எஸ் கோவில் நிர்வாகத்தினர் இசை நிகழ்ச்சியை நடத்த அழைப்பு விடுத்தனர்.
தொடர்ந்து சிறுவனின் பியானோ இசை நிகழ்ச்சி குடும்பத்தினரின் ஆதரவில் கோவிலின் தலைமை குரு பிரம்ம விஹாரிதாஸ் சுவாமி தலைமையில் நடந்தது. கங்கை நீர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 500 பார்வையாளர்கள் பங்கேற்று கேட்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 8 படைப்புகளை பியானோ இசையில் வாசித்து சிறுவன் ரசிகர்களை மகிழ்வித்தார். குறிப்பாக பீத்தோவனின் இசையை வாசிக்கும்போது கைத்தட்டல் எழுந்தது. அமீரகத்தை சேர்ந்த சிறுவன் இந்து கோவிலில் பியானோ வாசித்தது நல்லிணக்கத்தின் பிரதிபலிப்பாக இருந்தது என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இசை நிகழ்ச்சியில் பேசிய சிறுவன் அகமது அல் ஹாஷெமி கூறும்போது, “நான் இந்த கோவிலுக்கு வந்தபோது அமைதியை உணர்ந்தேன். இவர்களின் அன்பால் நெகிழ்ச்சியடைந்தேன். அப்போதே கோவிலில் பியானோ வாசிக்க வேண்டும் என விரும்பினேன். இந்த கோவில் நிம்மதியை உணரும் இடமாக உள்ளது” என பேசினார்.
தொடர்ந்து பேசிய பிரம்ம விஹாரிதாஸ் சுவாமி, “இந்த இசை நம்மை சுற்றியுள்ள உலகத்தை மட்டுமல்ல நமக்குள் இருக்கும் உலகத்தை மாற்றும் சக்தியை அழகாக விளக்குகிறது” என பாராட்டினார்.






