பெட்ரோல் கப்பலில் தீ விபத்து: இந்திய மாலுமிகள் 23 பேர் பத்திரமாக மீட்பு

பெட்ரோல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து இந்திய மாலுமிகள் 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஏடன்,
ஏமன் நாட்டில் உள்ள ஏடன் துறைமுகத்துக்கு கேமரூன் நாட்டைச் சேர்ந்த எம்.வி.பால்கான் என்ற கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் வந்தது. அங்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்த பின்னர் மீண்டும் அந்த கப்பல் அங்கிருந்து ஜிபோட்டின் கடற்படை தளத்துக்கு சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் இந்திய மாலுமிகள் 23 பேர் உள்பட ஏராளமானோர் பணியில் இருந்தனர்.
நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கப்பலில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென கப்பல் முழுவதும் பரவி எரிந்தது. இதனால் மாலுமிகள் செய்வதறியாது திகைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ஜிபோட்டின் கடற்படை பாதுகாப்பு குழுமத்தினர் விரைந்து வந்து கப்பலில் சிக்கித்தவித்த இந்திய மாலுமிகள் 23 பேர் உள்பட அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
மேலும் கப்பலில் பிடித்த தீயையும் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட மாலுமிகள் அனைவரும் சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.






