பிரான்ஸ்: கனமழை, வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு


பிரான்ஸ்: கனமழை, வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 March 2025 4:30 AM IST (Updated: 3 March 2025 4:31 AM IST)
t-max-icont-min-icon

ரியூனியன் தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

பாரீஸ்,

இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு குட்டி தீவு ரியூனியன். மடகாஸ்கர் மற்றும் மொரீசியசுக்கு இடையே உள்ள இந்த தீவு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

அங்கு உருவாகி உள்ள புயலால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி புயல் கரையை கடந்தபோது மணிக்கு சுமார் 240 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதனை தொடர்ந்து ரியூனியன் தீவில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் பல வீடுகள் சேதமடைந்தன.

மேலும் சாலையில் சென்ற பல கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எனவே வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

அதேபோல் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. எனவே அங்கு வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது. இதற்கிடையே பிரான்சில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்பு படையினர் அங்கு விரைந்து உள்ளனர்.

1 More update

Next Story