மரண தண்டனை கைதிக்கு இரக்கம் காட்டிய இந்தோனேசியா.. சொந்த நாட்டிற்கு அனுப்பியது


மரண தண்டனை கைதிக்கு இரக்கம் காட்டிய இந்தோனேசியா.. சொந்த நாட்டிற்கு அனுப்பியது
x
தினத்தந்தி 5 Feb 2025 10:44 AM IST (Updated: 5 Feb 2025 5:04 PM IST)
t-max-icont-min-icon

மரண தண்டனை கைதியை நாடு கடத்துவது தொடர்பாக இந்தோனேசியா-பிரான்ஸ் இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஜகார்த்தா,

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்ட நாடுகளுள் இந்தோனேசியாவும் ஒன்று. அங்கு போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை வழங்கப்படுகிறது.

அந்தவகையில் போதைப்பொருள் கடத்தியதாக கடந்த 2005-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செர்ஜ் அட்லாவுய் என்பவர் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் முடிவில், அவரது தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டது.

அவரது மரண தண்டனையை 2015-ல் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்த அழுத்தத்தால் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் செர்ஜ் அட்லாவுயின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி அவரை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று பிரான்ஸ் அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையின் முடிவில் கடந்த மாதம் 24-ம் தேதி இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. நான்கு குழந்தைகளின் தந்தையான செர்ஜ் அட்லாவுயை (வயது 61) மனிதாபிமான அடிப்படையில் நாடு கடத்த இந்தோனேசியா ஒப்புக்கொண்டது. செர்ஜ் அட்லாவுய்க்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதாலும், வாரந்தோறும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவரை தாய்நாட்டிற்கு அனுப்பும் முடிவை இந்தோனேசியா எடுத்துள்ளது.

அதன்படி, நேற்று அவர் ஜகார்த்தா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரான்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் அவரது தண்டனை குறித்த முடிவை பிரான்ஸ் அரசாங்கத்திடமே இந்தோனேசியா விட்டுள்ளது. இன்று மாலையில் அவர் பிரான்ஸ் வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story