ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொலை - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு


ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொலை - இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
x

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

ஜெருசலேம்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் இன்னும் 58 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனிடையே ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வாரின் சகோதரான முகமது சின்வார் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழு புதிய தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும் இன்று தெரிவித்துள்ளார். தெற்கு காசாவில் ஐரோப்பிய மருத்துவமனை அருகே நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் சுரங்க அறையில் பதுங்கி இருந்த முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். இந்த தாக்குதல் ஹமாஸ் ஆயுதக்குழுவின் ரபா படைப்பிரிவு தளபதி முகமது ஷபானாவும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார். இது குறித்து ஹமாஸ் தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

1 More update

Next Story