சாய்பாபாவின் தீவிர பக்தரா நிக்கோலஸ் மதுரோ...? பரபரப்பு தகவல் வெளியீடு

அரசியல் செய்திகளில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் இருந்து மதுரோ விலகி காணப்பட்டார்.
காரகாஸ்,
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும், வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.
இதற்கு, ரஷியா மற்றும் ஈரான் போன்ற நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்திய அரசு இதற்கு கவலை தெரிவித்துள்ளது. நிலைமையை கவனித்து வருவதுடன், வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், மதுரோவுக்கு இந்தியாவுடன் உள்ள தொடர்பு பற்றிய புதிய தகவல் வெளியாகி உள்ளது. மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் சாய்பாபாவின் தீவிர பக்தர்கள். கத்தோலிக்க மதத்தவரான மதுரோ, புளோரசை கரம் பிடிப்பதற்கு முன்னர், அவரை சாய்பாபாவிடம் புளோரஸ் அறிமுகப்படுத்தி உள்ளார்.
அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்னர், ஆந்திர பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தி பகுதியில் அமைந்த பிரசாந்தி நிலையம் ஆசிரமத்திற்கு 2005-ம் ஆண்டு ஒன்றாக சென்று சத்ய சாய் பாபாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அவருடன் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது.
பல தசாப்தங்களாக சாய்பாபாவின் தீவிர பக்தராக மதுரோ இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்ததும் தன்னுடைய அரண்மனையில் தனி அலுவலகத்தில் சைமன் பொலிவர் மற்றும் ஹியுகோ சாவேஸ் ஆகியோருடன் சாய்பாபாவின் புகைப்படமும் தொங்க விடப்பட்டது.
2011-ம் ஆண்டில் சாய்பாபா மறைந்தபோது, அப்போது வெளியுறவு மந்திரியாக இருந்த மதுரோவின் வழிகாட்டுதலின்படி, அதிகாரப்பூர்வ இரங்கல் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, அந்த நாள் ஒரு தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டது.
இதேபோன்று 2024-ம் ஆண்டில், வெனிசுலா அரசு நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தின்போது ‘ஓம்’ என்ற அடையாளத்துடன் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டன.
வெனிசுலாவில் இருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற்றப்பட்ட போதிலும், பல ஆண்டுகளாக, மதுரோவின் ஆட்சியின் கீழ் சத்ய சாய் அமைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டம் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் செய்திகளில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் இருந்து மதுரோ விலகி காணப்பட்டார். இந்நிலையில், அவருக்கு எதிராக அமெரிக்கா கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.






