ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி... ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் - 8 பேர் பலி

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது.
சனா,
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனிடையே, இஸ்ரேல் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன் தினம் டிரோன் தாக்குதல் நடத்தினர். ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய டிரோன் இஸ்ரேலின் கடற்கரை நகரான எலியட்டை தாக்கியது. இந்த டிரோன் தாக்குதலில் 22 பேர் காயமடைந்தனர். இதில், 2 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எலியட் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமன் மீது இஸ்ரேல் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இருப்பிடங்கள், பாதுகாப்பு அலுவலங்கள், உளவுபிரிவு அலுவலகங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 140 பேர் காயமடைந்தனர்.






