ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு

விவேக் ராமசாமி ஒரு சிறந்த மனிதர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாகாணத்திற்கு கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான விவேக் ராமசாமி போட்டியிட உள்ளார். இந்த நிலையில் விவேக் ராமசாமிக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒஹியோ மாகாணம் எனக்கு மிகவும் பிரியமான இடம். அங்கு நான் 2016, 2020, 2024 தேர்தல்களில் மூன்று முறை வெற்றி பெற்றேன். அங்கு கவர்னராக போட்டியிடும் விவேக் ராமசாமி, இளமையானவரும், வலிமையானவரும் ஆவார். அவர் மிகுந்த புத்திசாலி, நாட்டை உண்மையாக நேசிப்பவர். நானும் அவருடன் போட்டியிட்டிருக்கிறேன், அவரை நன்கு அறிவேன். அவர் ஒரு சிறந்த மனிதர்” என்று தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் ஆதரவுக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார். தற்போது 40 வயதாகும் விவேக் ராமசாமி, தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் ஆவார். கடந்த ஆண்டு குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், அவர் டிரம்பை ஆதரித்து அவரது நம்பிக்கைக்குரியவராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






