நம்முடைய உறவுகளில் புதிய உத்வேகமும், ஆழமும் பிறக்கும்: ஜோர்டானில் பிரதமர் மோடி பேச்சு

இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கியதற்காக தன்னுடைய பாராட்டுகளை பிரதமர் மோடி தெரிவித்து கொண்டார்.
அம்மான்,
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன், சிறப்பான முறையில் வரவேற்றார். இதன்பின்னர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றதற்காக ஜோர்டான் தலைமைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கியதற்காக தன்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, ஜோர்டானில் எனக்கும், என்னுடைய குழுவினருக்கும் அளித்த அன்பான வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியா மற்றும் ஜோர்டான் உறவுகளை புதிய உச்சத்திற்கு எடுத்து செல்வதற்கான மிக நேர்மறையான கருத்துகளை நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள். உங்கள் நட்புக்கும் இந்தியாவுடனான உங்கள் ஆழ்ந்த ஈடுபாட்டுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
இதேபோன்று இருதரப்பு உறவுகளில் இந்த ஆண்டு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என குறிப்பிட்டார். இதுபற்றி அவர் பேசும்போது, இந்த ஆண்டு, தூதரக அளவிலான நம்முடைய உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறோம். வர இருக்கிற பல ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் நாம் முன்னேற இந்த மைல்கல் நமக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
இன்றைய கூட்டம் புதிய ஊக்கம் அளிப்பதுடன், நம்முடைய உறவில் ஆழமும் ஏற்படுத்தும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார். வர்த்தகம், உரம், டிஜிட்டல் தொழில் நுட்பம், உட்கட்டமைப்பு மற்றும் இரு நாட்டு மக்களின் பரிமாற்றங்கள் ஆகியவற்றில் நாம் ஒத்துழைப்புடன் செயல்படுவோம் என்றும் கூறினார்.






