பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்


பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் உயிருடன் புதைந்த 2 ஆயிரம் பேர்
x
தினத்தந்தி 27 May 2024 9:49 AM GMT (Updated: 28 May 2024 2:54 AM GMT)

நிலச்சரிவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மெல்போர்ன்,

தென்மேற்கு வங்க கடலில், ஆஸ்திரேலியா நாட்டின் வடக்கு பகுதியில் பப்புவா நியூ கினியா நாடு உள்ளது. இதைச் சுற்றி கடல் பகுதி சூழ்ந்துள்ளதால் தீவாக கருதப்படுகிறது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் , புயல்கள், எரிமலைகள் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ( மே 24 ) அன்று அதிகாலை, மலைப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இங்கு நிலச்சரிவு ஏற்பட்டது முதல் முறையில்லை. ஆனால் இதுபோன்ற மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது.

அதிகாலை சுமார் 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மக்கள் அனைவரும் அமைதியாக உறங்கி கொண்டிருந்த நேரம். அப்போது எதிர்பாராத இந்த நிலச்சரிவால் குறைந்த பட்சம் 6 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் 3 கிராமங்கள் மண்சரிவுகளால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும், சுமார் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவுக்குள் சிக்கியுள்ளது என்றும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 670க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக ஐ.நா. தெரிவித்தது.

இந்தநிலையில், பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மிகப் பெரிய நிலச்சரிவில் 2,000 க்கும் அதிகமானோர் உயிருடன் மண்ணுக்குள் புதைந்ததாக அந்நாடு பேரிடர் மேலாண்மை துறை ஐ.நா.வுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலச்சரிவில் கட்டிடங்கள், விவசாய நிலங்கள் அழிந்ததுடன், வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக அந்நாட்டு அரசு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வந்ததாகவும் 150- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்திருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

'என் உயிரைக் காப்பாற்றியதற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். நான் இறந்து விடுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் பெரிய பாறைகள் என் மீது வீழவில்லை. கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நான் பாறைக்குள் சிக்கியிருந்தேன். பின்னர் மீட்கப்பட்டேன்' என நிலச்சரிவில் தப்பிய ஜான்சன் என்பவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் தெரிவிக்கையில் , மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்றும் உலக நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதனிடையே தொடர்ந்து அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாலும், சேதமடைந்த சாலைகளாலும் மீட்பு பணிகளுக்கு இடையூறாக உள்ளன. நிலச்சரிவினால் சுமார் 4 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்கவைப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு நடந்த இடத்திற்கு உதவ விமானம் மற்றும் பிற உபகரணங்களை அனுப்ப ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு மந்திரி ரிச்சர்ட் மார்லெஸ் கூறியுள்ளார்.

பேரிடர் மீட்பு படையினரின் வருகை தாமதமாவதால், உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். வீடுகள் 8 மீட்டர் ஆழத்தில் புதைந்துள்ளதால் எங்கு மக்கள் புதைந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் மக்கள் எல்லா இடங்களிலும் தோண்ட தொடங்கியுள்ளனர். கூடுதலாக மீட்பு படையினர் தேவைப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story