அதிபர் நாட்டை விட்டு ஓட்டம்; மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

ராணுவ கிளர்ச்சியைத் தொடர்ந்து தனது உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறியதாக அதிபர் தெரிவித்தார்.
அதிபர் நாட்டை விட்டு ஓட்டம்; மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்
Published on

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக இளைஞர்கள் கடந்த மாதம் 25-ந்தேதி போராட்டத்தில் குதித்தனர். ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளால் ஜெனரேஷன் Z தலைமுறையினர் தங்களது போராட்டத்தை கடந்த சில நாட்களாக தீவிரப்படுத்தினர். இதில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையில், இளைஞர்களின் போராட்டத்துக்கு ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். அதிபர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால் ராணுவம் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா குற்றம்சாட்டினார்.இந்த நிலையில் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா நாட்டைவிட்டு தப்பி ஓடியுள்ளார். அவர் பிரான்ஸ் ராணுவ விமானத்தின் மூலம் நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. ராணுவ கிளர்ச்சியைத் தொடர்ந்து தனது உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறும்போது, என் உயிரைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது, என்றார். அவர் தனது உரையில், அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக சொல்லவில்லை.அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தப்பி ஓடிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சிடேனி ராண்ட்ரியானா சோலோனியாகோ அறிவித்துள்ளார்.பிரான்சின் காலனி ஆதிக்க நாடாக மடகாஸ்கர் இருந்து வந்தது. காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையான பின்னும் மடகாஸ்கரில் தனது படைவீரர்களை பிரான்ஸ் நிலைநிறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதிபர் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில், மடகாஸ்கரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட ராணுவ கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, விரைவில் மக்கள் அரசாங்கத்தை அமைக்க பிரதமர் நியமிக்கப்படுவார், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com