வர்த்தக கூட்டாளியை தேர்வு செய்யும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது: ரஷ்யா கருத்து

ரஷ்யாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாஷிங்டன்,
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அரசு " உக்ரைன் மோதல் தொடங்கிய பின், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் இந்தியா குறி வைக்கப்பட்டுள்ளது. உண்மையில், மோதல் வெடித்த பிறகு வழக்கமான விநியோகங்கள் ஐரோப்பாவிற்கு திருப்பி விடப்பட்டதால் இந்தியா ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கியது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்காக அந்நேரத்தில் அமெரிக்கா இந்தியாவின் இத்தகைய இறக்குமதிகளை தீவிரமாக ஊக்குவித்தது.
இந்தியாவின் இறக்குமதிகள் இந்திய நுகர்வோருக்கு கணிக்கக்கூடிய மற்றும் மலிவு விலையில் எரிசக்தி செலவுகளை உறுதி செய்வதற்காகவே உள்ளன. இருப்பினும், இந்தியாவை விமர்சிக்கும் நாடுகள் தாங்களாகவே ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்பதை இது வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, அது ரஷ்யாவிலிருந்து அதன் அணுசக்தித் தொழிலுக்கு யுரேனியம் ஹெக்ஸாப்ளூரைடு, அதன் மின்சார உற்பத்தித் தொழிலுக்கு பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து இறக்குமதி செய்கிறது" என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவின் கருத்துக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், தனது வர்த்தக கூட்டாளியை தேர்வு செய்யும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது. நாங்கள் பல அறிக்கைகளை சொல்லப்போனால் அச்சுறுத்தல்களை பார்த்து வருகிறோம். ரஷ்யாவுடன் உறவை துண்டித்துக்கொள்ள வற்புறுத்தப்படுகிறது. இவற்றை சட்டப்பூர்வமானதாக நாங்கள் கருதவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.






