ஏமன் அருகே பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது.
சனா,
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஏமன் அருகே அரபிக்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கப்பலில் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை, தாக்குதலில் கப்பலில் பயணித்த மாலுமிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல் எந்த நாட்டை சேர்ந்தது என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.






