விண்வெளிக்கு செல்லும் முன்பு சுபான்ஷு சுக்லா விரும்பி கேட்ட ஏ.ஆர்.ரகுமான் பாடல்

விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்கின்றனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.
இதற்கான பணிகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 'பால்கன்-9' ராக்கெட் மூலம், இன்று மதியம் 12.01 மணிக்கு 'ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைகிறது.
இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்கின்றனர். ராக்கெட் விண்வெளியை அடைந்த பிறகு விண்கலத்தை செலுத்தும் பணியை மேற்கொள்ளும் விமானியாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) செயல்பட உள்ளார்.
விண்வெளிப் பயணத்தின் துவக்கத்தின்போது "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.." என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முழங்கி, தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார். சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.
இந்த நிலையில், சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு புறப்படுவதற்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பாடலை விரும்பி கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளிக்கு செல்வதற்கு முன்பாக விண்வெளி வீரர்கள் 4 பேரும் எந்தெந்த பாடலை விரும்பி கேட்டனர் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
அதன்படி, 'யூஹி சலா சல் ராஹி' என்ற இந்தி பாடல் சுபான்ஷு சுக்லாவின் விருப்ப பாடலாக இருந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'சுவதேஸ்' என்ற பாலிவுட் திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பின்னணி பாடகர்கள் உதித் நாராயணன், ஹரிஹரன் ஆகியோர் இணைந்து பாடிய இந்த பாடல் தற்போது இணையத்தில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.






