‘இது இந்தியா அல்ல..’ நியூசிலாந்தில் சீக்கியர்களின் பேரணியை தடுத்து நிறுத்திய ‘தேசபக்தி’ அமைப்பினர்


‘இது இந்தியா அல்ல..’ நியூசிலாந்தில் சீக்கியர்களின் பேரணியை தடுத்து நிறுத்திய ‘தேசபக்தி’ அமைப்பினர்
x

போராட்டக்காரர்கள் மாவோரி இனத்தவரின் பாரம்பரிய நடனமான ‘ஹக்கா’ நடனத்தை ஆடத் தொடங்கினர்.

வெல்லிங்டன்,

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ள கிரேட் சவுத் ரோடு பகுதியில் சீக்கியர்கள் சிலர் பேரணி ஒன்றை நடத்தினர். அப்போது ‘நியூசிலாந்தின் உண்மையான தேசபக்தர்கள்’ எனப்படும் அமைப்பை சேர்ந்தவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர், சீக்கியர்களின் பேரணியை எதிர்கொண்டு தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவர்கள் நியூசிலாந்தின் பழங்குடி மக்களான மாவோரி இனத்தவரின் பாரம்பரிய நடனமான ‘ஹக்கா’ நடனத்தை ஆடத் தொடங்கினர். அப்போது அவர்கள், ‘இது எங்கள் நாடு, இது எங்கள் நிலம், இது இந்தியா அல்ல, நியூசிலாந்து’ என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷமிட்டனர்.

இவர்கள் அனைவரும் அரசியல்வாதியும், கிறிஸ்தவ அடிப்படைவாத மதத் தலைவருமான பிரையன் தமாகியின் தேசபக்தி அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து பிரையன் தமாகி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது வெறுப்பு அல்ல, இது ஒரு சவால். நியூசிலாந்து ஒரு கிறிஸ்தவ நாடு. எங்கள் கடவுள் இயேசு கிறிஸ்து. வெளிநாட்டு மதங்கள் இங்கு ஆதிக்கம் செலுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இது எங்கள் நாடு, இதுவே எங்கள் நிலைப்பாடு” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, சீக்கியர்களின் பேரணி அமைதியான முறையில் நடைபெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களால் சீக்கியர்களின் பேரணிக்கு இடையூறு ஏற்படவில்லை என அவர்கள் கூறியுள்ளனர். நியூசிலாந்தில் சீக்கியர்களின் பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

1 More update

Next Story