டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி; அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் தள்ளி போகும் அபாயம்


டிரம்ப் வரி விதிப்பு எதிரொலி; அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் தள்ளி போகும் அபாயம்
x
தினத்தந்தி 18 Jan 2026 2:29 PM IST (Updated: 18 Jan 2026 4:54 PM IST)
t-max-icont-min-icon

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் இடையே இருதரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

பிரஸ்ஸல்ஸ்,

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு கடுமையான வரி விதிப்புகள், எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலாவின் அதிபர் கைது, வெனிசுலாவின் பல கோடி மதிப்பிலான எண்ணெய் பீப்பாய்கள் கொள்முதல், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிப்புகள் என அதிரடி காட்டி வரும் அவர், அடுத்து கிரீன்லாந்து மீதும் டிரம்ப் குறி வைத்துள்ளார்.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆர்க்டிக் பெருங்கடலில் பெரும்பலத்துடன் உள்ள ரஷியா மற்றும் சீனா நாடுகளிடம் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க கிரீன்லாந்து எங்களுக்கு அவசியம் என கூறினார். அதனால், சுயாட்சி பிராந்திய பகுதியை எங்களிடம் விற்க வேண்டும் என டிரம்ப் தொடர்ந்து டென்மார்க்கை வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், டென்மார்க்கோ அல்லது நேட்டோ நாடுகளோ இதற்கு சம்மதிக்கவில்லை. இதற்கு பிற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கிரீன்லாந்தின் பாதுகாப்பை வலுப்படுத்த பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய படைகளை அனுப்பி வருகின்றன.

எனினும், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து வேண்டும். இதனை எதிர்க்கும் நாடுகளுக்கு நான் வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டலாக கூறியுள்ளார். ஆனால், பல ஐரோப்பிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சூழலில், டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்க டிரம்ப் உத்தரவிட்டார். இது அந்நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் பணியை நிறுத்தி வைக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் கேட்டு கொண்டுள்ளது.

இதுபற்றி ஐரோப்பிய மக்கள் கட்சியின் துணை தலைவர் சீக்பிரைடு முரேசன் கூறும்போது, நாங்கள் இந்த ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவது என இருந்தோம். இதனால், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியானது பூஜ்ய சதவீதம் என்ற அளவில் குறைக்கப்பட இருந்தது. எனினும், தற்போது உள்ள சூழலால், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சற்று காலம் பொறுத்திருக்க வேண்டியுள்ளது என கூறினார்.

இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூலையில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் இடையே இருதரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. பல்வேறு வரிகள் மற்றும் வர்த்தக நடைமுறைகளில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் நோக்குடன் இது அமைந்தது. ஆனால், டிரம்பின் அணுகுமுறையால் அமெரிக்காவுக்கு சாதகம் ஏற்படுத்த கூடிய இந்த ஒப்பந்தம் ஏற்படாமல் தள்ளி போக கூடும் என பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story