ஏமனில் இங்கிலாந்து வான்வழி தாக்குதல்


ஏமனில் இங்கிலாந்து வான்வழி தாக்குதல்
x

சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சனா,

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க டிரோன்கள், போர் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், ஏமனில் இங்கிலாந்து இன்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. செங்கடல் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க படையுடன் இணைந்து இங்கிலாந்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் நடந்த இந்த வான்வழி தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன் தயாரிப்பு ஆலையை குறிவைத்து நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

1 More update

Next Story