ஐ.நா. சாசனம் இஷ்டத்திற்கு செயல்பட அல்ல; வெனிசுலா விவகாரம் பற்றி ஐ.நா. பொது சபை தலைவர் கருத்து

ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கு எதிராக எந்த வகையிலும் செயல்படாமல் தவிர்க்க வேண்டும் என அவர் சுட்டி காட்டினார்.
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஐ.நா. பொது சபையின் தலைவரான அன்னலேனா பேயர்போக் வெனிசுலா விவகாரம் பற்றி இன்று சுட்டி காட்டி பேசினார். அவர் கூறும்போது, ஐ.நா. சாசனத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டியது கட்டாயம். அது இஷ்டத்திற்கு செயல்படுவதற்கானது அல்ல.
அமைதியான நேரத்திலும் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையால், வெனிசுலாவில் இன்று ஏற்பட்டிருப்பது போன்ற நெருக்கடியான காலங்களிலும் கூட, சர்வதேச செயல்பாட்டுக்கு வழிகாட்டும் எங்களுடைய கட்டமைப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.
இதேபோன்று, ஐ.நா. சாசனத்தின் பிரிவு 2 ஆனது, ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும், எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலில் ஈடுபடுவது அல்லது படையை பிரயோகிப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கு எதிராக எந்த வகையிலும் செயல்படாமல் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது என அவர் சுட்டி காட்டினார்.
உலக நடைமுறையை, சட்டத்திற்கு பதிலாக ஆட்சியதிகாரம் கொண்டு நிர்வகிப்பதற்கு எதிராக அவர் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார். வலிமையே சரியானவற்றை செய்யும் என்பதற்கு பதிலாக சட்டத்தின் ஆட்சி இருக்கும்போது தான், அமைதியான, பாதுகாப்பான மற்றும் ஒவ்வொருவருக்கும் கிடைக்க கூடிய உலகம் என்பது சாத்தியப்படும் என்றும் அவர் கூறினார்.
ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளிப்பது என்பதே சர்வதேச கட்டளைக்கு அடித்தளம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்குள் வெனிசுலா அபாயகர போதை பொருட்களை கடத்துகிறது என்றும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி சிலியா புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நிகோலஸ் மீது, அமெரிக்காவுக்கு எதிராக போதை பொருள் கடத்தல் சதி திட்டம், கொக்கைன் இறக்குமதி சதி திட்டம், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுக்கான கருவிகளை பதுக்கி வைப்பதற்கான சதி திட்டம் ஆகிய வழக்குகள் பதிவாகி உள்ளன. அவர்கள் விரைவில் அமெரிக்க கோர்ட்டுகளில், அமெரிக்க மண்ணில், அமெரிக்க நீதியை பெறுவார்கள் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பமீலா போண்டி கூறினார்.
எனினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, வெனிசுலாவில் உள்ள எண்ணெய் மற்றும் பிற வளத்திற்காக என உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது.






