கரீபியன் கடல் பகுதிகளில் மற்றொரு எண்ணெய் கப்பலை சிறைபிடித்த அமெரிக்கா

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை, கடற்படை உள்ளிட்ட படைகள் இணைந்து இந்நடவடிக்கையை எடுத்து உள்ளன.
வாஷிங்டன் டி.சி.,
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என கூறி அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை டிரம்ப் அரசு கைது செய்தது. நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து சில நாட்களுக்கு முன் நாடு கடத்தப்பட்டனர்.
கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதலை நடத்தவும், கடுமையான நடவடிக்கை எடுக்கவும் டிரம்ப் அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த தாக்குதலில் இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், போதை பொருட்கள் கடத்தலுக்கு உதவியாக செயல்படும் எண்ணெய் கப்பல்களையும் அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து அவற்றை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ரஷியாவின் மரைனிரா என பெயரிடப்பட்ட எண்ணெய் கப்பலை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வைத்து, அமெரிக்க படையினர் சமீபத்தில் சிறைபிடித்து கொண்டு சென்றனர்.
முதலில் பெல்லா 1 என்ற பெயருடன் சென்ற அந்த கப்பல், அமெரிக்காவின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக ரஷிய கொடியுடனுடம், பெயரை மரைனிரா என மாற்றியும் சென்றது. எனினும், தொடர்ந்து அதனை கண்காணித்தபடியே சில நாட்களாக பின்தொடர்ந்து சென்று பின்னர் அதனை அமெரிக்கா சிறைபிடித்தது. இதேபோன்று சோபியா என்ற கப்பலும் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஒலினா என பெயரிடப்பட்ட மற்றொரு எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை சிறைபிடித்து உள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை, கடற்படை உள்ளிட்ட படைகள் இணைந்து இந்நடவடிக்கையை எடுத்து உள்ளன.
இதுபற்றி அமெரிக்காவின் தெற்கு பிராந்தியத்திற்கான பாதுகாப்பு படை நேற்றிரவு வெளியிட்ட செய்தியில், எங்களுடைய படைகள் கூட்டாக இணைந்து, மேற்கத்திய பகுதியில் நடந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கி வருகிறோம். குற்றவாளிகளுக்கு எந்தவித அடைக்கலமும் கிடையாது என தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த தாக்குதல்கள் கப்பல்களான ஐ.எஸ்.எஸ். ஐவோ ஜிமா, ஐ.எஸ்.எஸ். சான் ஆன்டனியோ மற்றும் ஐ.எஸ்.எஸ். போர்ட் லாடர்டேல் உள்ளிட்டவற்றின் உதவியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






