பாரீசில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற ஜின் - உற்சாகத்தில் பி.டி.எஸ் ரசிகர்கள்


பாரீசில் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்ற ஜின் - உற்சாகத்தில் பி.டி.எஸ் ரசிகர்கள்
x

Image Courtesy: @Olympic 

ஒலிம்பிக் ஜோதியை ஜின் ஏந்திய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாரீஸ்,

உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவை சேர்ந்த பி.டி.எஸ் (B.T.S) ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு ஏராளமான இசை ஆல்பங்களையும், பாடல்களையும் உருவாக்கி உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளது.

குழுவாக பாடல்களை வெளியிட்டு வந்த பி.டி.எஸ் (B.T.S) குழுவினர் சமீப காலமாக தனித்தனியாக பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது பி.டி.எஸ் (B.T.S) குழுவினர் ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர். தென்கொரியாவில் இளைஞர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி பெறவேண்டும். அந்த வகையில் பி.டி.எஸ் (B.T.S) குழுவினரும் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஜின்னின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் தான் ராணுவ பயிற்சியில் இருந்து வெளியே வந்தார்.

ராணுவப் பயிற்சியைத் தொடர்ந்து தனது துறைரீதியான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக பிடிஎஸ் தொடங்கி 11 ஆண்டுகள் ஆனதையடுத்து கொண்டாடப்பட்ட 2024 பி.டி.எஸ் பெஸ்டா (B.T.S. Festa) என்ற விழாவில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் பாரீசில் ஒலிம்பிக் போட்டி தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஒலிம்பிக் ஜோதியை பி.டி.எஸ் குழு உறுப்பினர் ஜின் ஏந்திய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று பாரீசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகம் அருகே ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றார். அவரைக் காண பாரீசில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதன் மூலம் ஜின் ஒலிம்பிக் தொடரின் ஜோதியை ஏந்தி சென்ற முதல் கே-பாப் பாடகராக ஆனார்.

ஜோதி ஓட்டத்தை முடித்த பின் அவர் கூறும்போது, இன்றைய டார்ச் ரிலேயில் பங்கேற்க முடிந்ததற்கு நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். நான் ஜோதியை ஏந்திச் செல்வதை சாத்தியமாக்கிய ராணுவம் மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.




Next Story