நாடாளுமன்ற தேர்தல்: கேரளாவில் 20 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு


நாடாளுமன்ற தேர்தல்: கேரளாவில் 20 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
x

கோப்புப்படம்

கேரளாவில் இன்று 20 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்படுகிறது.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் உள்பட 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளும் அடங்கும்.

2-வது கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. கேரளா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 89 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது.

இதில் கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும், பா.ஜனதா தலைமையில் 3-வது அணியும் அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இதனால் இங்கு தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.

கேரளாவில் மார்ச் 25-ந் தேதி நிலவரப்படி மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 49 ஆயிரத்து 159 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 1 கோடியே 34 லட்சத்து 15 ஆயிரத்து 293, பெண் வாக்காளர்கள் 1 கோடியே 43 லட்சத்து 33 ஆயிரத்து 499 ஆகும். 3-ம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 367 பேர். மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 232.

25 ஆயிரத்து 177 வாக்குச்சாவடியும், 181 கூடுதல் (துணை) வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் உபகரணங்களுடன் ஊழியர்கள் அவரவர் வாக்குச்சாவடிகளுக்கு சென்றனர். அனைத்து வாக்குசாவடிகளிலும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Next Story