விக்கிரவாண்டி தொகுதி காலி: அரசிதழில் வெளியீடு
தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி திடீர் மரணத்தால் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் புகழேந்தி (தி.மு.க.). இவர் கடந்த 5-ந் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், மேடையில் மயங்கி விழுந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் 6-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று முன்தினம் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இதுகுறித்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அந்த மாவட்ட தேர்தல் அதிகாரி அனுப்பினார். அந்த தகவலை இந்திய தேர்தல் கமிஷனுக்கு சத்யபிரதா சாகு தெரிவித்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை சட்டசபை செயலகம் வெளியிட்டது.
இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.