'15 லட்சம் ரூபாய், 2 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே?' - அமித்ஷாவுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து விமர்சித்த அமித்ஷாவுக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை 'சீன வாக்குறுதி' என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விமர்சித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்கறுதிகளின் நம்பகத்தன்மையை வைத்து அதை 'சீன வாக்குறுதி' என்று குறிப்பிட்டேன். அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளில் எந்த அர்த்தமும் இல்லை.
தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, பின்னர் அதனை மறந்துவிடுவார்கள். நான் சமீபத்தில் தெலுங்கானாவிற்கு சென்றேன். அங்கு பெண்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. விவசாயிகள் 2 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இளம் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படவில்லை.
இவை அனைத்தும் ராகுல் காந்தி கொடுத்த வாக்குறுதிகள். இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று கூறுகிறேன். தேர்தலுக்குப் பிறகு அவர்கள் வாக்குறுதிகளை மறந்துவிடுவார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அமித்ஷாவின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அமித்ஷாவிடம் 15 லட்சம் ரூபாய் எங்கே? 2 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே? என்று கேளுங்கள். இது எத்தகைய வாக்குறுதி? சீன வாக்குறுதியா?" என்று கேள்வி எழுப்பினார்.