அருங்காட்சியகமாக செயல்படும் ஆங்கிலேயர் கால கட்டிடம்


அருங்காட்சியகமாக செயல்படும் ஆங்கிலேயர் கால கட்டிடம்
x

இந்தியாவில் வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் தாங்கள் நிர்வாகம் செய்வதற்கு வசதியாக பிரமாண்டமான கட்டிடங்களை கட்டினர். அப்படி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த கட்டிடம் தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளது.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகமாக செயல்பட்ட இந்த கட்டிடமானது பிரிட்டிஷ் கட்டிட வல்லுநர் ராபர்ட் சிஷோலம் என்பவரால் கடந்த 1896-ம் ஆண்டு முதல் 1900-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கட்டப்பட்டது. இது இந்தோ-சாரா சனிக் கட்டிடக்கலை பாணியை சார்ந்தது.

தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் பிற நிர்வாக பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த கட்டிடம் கடந்த 1910-ம் ஆண்டு முதல் கலெக்டர் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. அதாவது திருவாரூர், நாகை மாவட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகமாக செயல்பட்டது.

திருவாரூர், நாகை மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகமாக செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தில் இதுவரை 162 கலெக்டர்கள் பணி புரிந்துள்ளனர். பல்வேறு இடநெருக்கடி காரணமாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் அருகே 61.42 ஏக்கர் பரப்பளவில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து பழைய கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அலுவலகங்கள் புதிய கலெக்டர் அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டன.

பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முதன்மை கட்டிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி அருங்காட்சியகமும் செயல்பட தொடங்கியது. ஆனால் அந்த அருங்காட்சியகத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லை.

இதையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.9.4 கோடி மதிப்பில் பழமை மாறாமல் அருங்காட்சியக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் 2 தளங்களுடன் காட்சி அளிக்கிறது.

தரைத்தளத்தில் நிர்வாக அலுவலகம் இருக்கிறது. டிக்கெட் கொடுக்கும் இடம் நுழைவு பகுதியில் உள்ளது. உள்ளே சென்றவுடன் வலதுபுறத்தில் உலோக சிற்ப காட்சியகம் உள்ளது. அங்கு கணபதி, கிருஷ்ணர், சிவன்-பார்வதி, நர்த்தன விநாயகர் என 10-ம் நூற்றாண்டு முதல் 13-ம் நூற்றாண்டுகளை சேர்ந்த உலோக சிலைகள் இடம் பெற்றுள்ளன.

அடுத்த அறையில் கல் சிற்பங்களின் காட்சியகம் உள்ளது. அங்கு விஷ்ணு, மகா விஷ்ணு, தேவி, திருமால், சிவன், பைரவர், புத்தர், முருகன் என பல்வேறு கால கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் எந்ெதந்த ஆண்டுகளை சேர்ந்தவை என்ற குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளன. இதையடுத்து நிலஅளவீட்டுத்துறை காட்சியறை, சரஸ்வதி மகால் நூலக காட்சியறை, தாரகைகள் கைவினைப்பொருட்கள் விற்பனை அறை, பொதுஅரங்கம் ஆகியவை தரைத்தளத்தில் உள்ளன.

அங்குள்ள கற்களால் ஆன படிக்கட்டுகள் வழியாக முதல்தளத்திற்கு சென்றால் அங்கே மாவட்ட கலெக்டர் அலுவலக அறை உள்ளது. அங்கு இதுவரை கலெக்டராக பணி புரிந்தவர்களின் பெயர்கள், அவர்கள் ஆட்சி செய்த காலம், அவர்கள் பயன்படுத்திய மேஜை போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும் சுதந்திரம் அடைந்த பிறகு தஞ்சை மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்தவர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

அதேபோல் பொதுநிர்வாக அறையில் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு, ஓவியம், வீணை, நெட்டி உள்ளிட்ட பொருட்கள், தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை காவிரியில் தண்ணீர் எப்படி வருகிறது? சோழர் கால நீர் மேலாண்மை குறித்த ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் ஏர்கலப்பை, மாட்டு வண்டி, புல் அரிப்பான், பாத்தி அமைப்பான், எலிகிட்டி, களைக்கொத்தி, சகடை உள்ளிட்ட வேளாண் கருவிகளும் இடம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி கிராமக்கலைகள், புவிசார்குறியீடு பெற்ற கைத்தறி ஆடைகள், கைவினைப்பொருட்கள், கலைப்பொருட்கள், கைத்தறி காட்சியறை போன்ற பல்வேறு பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. சிறுவர்களுக்கான ரெயிலும் இயக்கப்படுகிறது. இசை நீரூற்றும் உள்ளது.

முதன்மைக்கட்டிடத்தின் பின்புறம் புதர் அடர்ந்து கிடந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு ஏறத்தாழ 2 ஏக்கரில் ராஜாளி பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் 20 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான பறவைகள் உள்ளன.

இந்த அருங்காட்சியக வளாகத்தில் 7 டி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சி யகத்தில் உள்ள ஒவ்வொன்றும் அனுபவித்து ரசிக்கும் விதமாக உள்ளது.


Next Story