"சமூக விடுதலையே உண்மையான விடுதலை" கல்லூரி மாணவிகளின் சுதந்திர சிந்தனை


சமூக விடுதலையே உண்மையான விடுதலை கல்லூரி மாணவிகளின் சுதந்திர சிந்தனை
x

சுதந்திரம்... இந்த வார்த்தையைக் கேட்டாலே மனசு சில்லென்று பறக்கும். அடிமைத்தளையை அறுத்த வீர வார்த்தை 'சுதந்திரம்.' நெஞ்சை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையுடன் வீறுநடை போட வைக்கும் வார்த்தை. அடிமைத்தளையில் இருந்து விடுபட நம் முன்னோர்கள் பலவித போராட்டங்களை முன்னெடுத்தனர். இதையடுத்து இந்தியா 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

ஆனால் 'நமக்கான சுதந்திரத்தை நாம் நிஜமாகவே அனுபவிக்கிறோமா?' என்ற கேள்வியுடன் கல்லூரி மாணவிகளில் சிலரிடம் கருத்து கேட்டோம். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்து உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் கல்லூரியில்தான் இந்தச் சந்திப்பு. தேசியக்கொடியின் மாண்பினை உணர்த்தும் வகையில் கொடியை தூக்கிப்பிடித்தபடி கல்லூரி வளாகத்தில் வலம் வந்து முடித்த மாணவிகளிடம் நடந்த உரையாடல்..

சுதந்திரம் பற்றி பலருக்கும் பல கருத்து உள்ளது. இன்றைக்கு பெண்களுக்கான விடுதலையும், சுதந்திரமும் எப்படியிருக்கிறது என்பதை அந்த மாணவிகள் பகிர்ந்துகொண்டனர்.

எஸ்.கீதாலட்சுமி:- சுதந்திரம் என்பது அடிமை நிலையில் இருந்து மீண்டு வருவது. நாம் மீண்டு வரவில்லை. நம்மை, நமது முன்னோர்கள் போராடி மீட்டு எடுத்து இருக்கிறார்கள். அந்த போராட்டத்தில் தியாகிகள் தங்கள் இன்னுயிரை கொடுத்தனர். இதில் பலரைப்பற்றி நமக்குத் தெரியாது. உண்மையில் அடிமைத்தனத்தின் வலியையும், சுதந்திரத்தின் மகிழ்ச்சியையும் அனுபவிக்க வேண்டும் என்றால், நமது தியாகிகளின் வரலாறுகளை படிப்பது அவசியம்.

ஏ.சிருஷ்டி:- சுதந்திரம் கிடைத்து விட்டது என்கிறார்கள். ஆனால் பெண்கள் இன்னும் அடிமை நிலையில்தான் இருக்கிறார்கள். ஆண் மகன் என்றால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். பெண்கள் என்றால் முதலில் பெற்றோருக்கு கட்டுப்பட வேண்டும். அடுத்து கணவனுக்கு, அடுத்து மகனுக்கு என்று இந்த வட்டத்தை விட்டு பெண்களால் இன்னும் வெளியே வர முடியவில்லை. இதில் சுதந்திரம் எங்கே இருக்கிறது.

எஸ்.காவ்யா:- இன்னும் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் பள்ளிப்படிப்புக்கு மேல் பெண்கள் போக முடியாத சூழல் இருக்கத்தான் செய்கிறது. பல பெண்களுக்கு பள்ளிப்படிப்பு முடிந்தால் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். திருமணம் முடிந்து விட்டால் பெண்களை பாதுகாப்பாக கணவரிடம் கொடுத்து விட்டதாக பெற்றோர் எண்ணுகிறார்கள். இது மிகப்பெரிய அடிமைத்தனம். இது மாற வேண்டும்.

எம்.சுருதிகாஸ்ரீ:- நாங்கள் எங்களை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். ஆனால் பெற்றோர் எங்களை, தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் பயம். இந்த சமூகம் சார்ந்த பயம். தங்கள் மகள்களை இந்த சமூகம் தவறாக பேசிவிடுமோ, அதனால் அவளின் எதிர்காலம் இருண்டு போய் விடுமோ என்ற பயம். எனவே பெண்களுக்கு சமூகத்தில் இருந்து உண்மையான சுதந்திரம் வேண்டும். பெண்களின் கல்வி, வேலை உள்ளிட்ட முயற்சிகளுக்கு பெற்றோரும், உறவினர்களும் சமுதாயமும் ஊக்கம் அளிக்க வேண்டும்.

ஆர்.சோபிகா:- சமூகம் சார்ந்த ஒழுக்கங்களில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக பொறுப்பு இருப்பதாக இந்த சமூகத்தில் ஒரு கட்டமைப்பு உள்ளது. நட்பு என்பதற்கு கூட பல அர்த்தங்கள் கற்பிக்கப்படுகிறது. இது பெற்றோருக்கு பயத்தை தருவதில் வியப்பில்லை. அதற்காக சமூகத்துக்கு அச்சப்பட்டுக் கொண்டே இருக்க முடியாது. ஒழுக்கத்துடன் நமது லட்சியத்தை நோக்கி நடைபோட வேண்டும். ஒரு வெற்றியை அடைந்து விட்டால் நாலு பேரின் அவதூறு பேச்சுக்கள், நாலாயிரம் பேரின் கைத்தட்டல்களுக்கு மத்தியில் காணாமல் போய்விடும்.

எஸ்.விஷாலினி:- சுதந்திரம்.. சுதந்திரம்.. என்கிறோம். ஆங்கிலேயர் கையில் இருந்து சுதந்திரம் கிடைத்து விட்டது. அதை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், இந்த சமூகத்தில் இருந்து ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் கிடைத்து இருக்கிறதா... பொருளாதார விடுதலை இல்லை. பொருளாதார சமநிலை இல்லை. கல்வியில் சுதந்திரம் இல்லை. கல்வியில் சமநிலை இல்லை. சாதிய வேறுபாடுகள் உள்ளிட்ட பல விஷயங்கள் இன்னும் நம்மை அடிமையாகவே வைத்திருக்கின்றன.

எம்.வைஷ்ணவி:- பள்ளிக்கூடத்தில் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். சமூக ஒற்றுமை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

எம்.அஞ்சலி:- அனைவருக்கும் சிறந்த கல்வி வேண்டும். கல்வி பெற்றால் அது சார்ந்த வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்கும். சமூக மாற்றத்துக்கு, சமூக விடுதலைக்கு கல்விதான் அடிப்படை.

ஏ.விஜயலட்சுமி வான்மதி:- உயர் கல்விகளுக்கு செல்ல நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது கல்வியை அழிப்பதாக, மாணவ-மாணவிகளை அச்சப்படுத்துவதாக இல்லாமல், அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான கருவியாக இருக்க வேண்டும். தகுதியை அல்லது திறமையை ஒரு தேர்வு மூலம் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் தகுதிக்கான தேர்வாக அது இருக்கும்போது அச்சமில்லாததாக அமைய வேண்டும்.

கே.தனலட்சுமி:- ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் ஒரே மாதிரி கல்வி கிடைக்க வேண்டும்.

எஸ்.சந்தியா:- இந்தியா என்ற ஒற்றைச் சொல்லில் கிடைக்கும் மகிழ்ச்சி நம் சுதந்திரத்தால் வந்தது. அது இன்று ஏட்டளவிலும், பேச்சளவிலும் தான் இருக்கிறது. சமூக அளவில் இன்னும் பல படிநிலை அடிமைத்தனங்கள் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே சமூக விடுதலை அனைவருக்கும் வேண்டும். இதை அடைய இன்னொரு சுதந்திர போருக்கு இன்றைய மாணவ-மாணவிகள் லட்சியத்துடன் களம் காண வேண்டும். அந்த களம் என்பது நன்றாக படித்து, உயர்நிலை அடைந்து அடுத்த தலைமுறைக்கு நாம் காணும் மாற்றத்தை, விடுதலையை, சுதந்திரத்தை வழங்குவதாகும். அப்படிப்பட்ட சமூக விடுதலையே உண்மையான விடுதலை.

இந்தக் கருத்தை அனைத்து மாணவிகளும் ஆதரிக்க சுதந்திர சிந்தனை உரையாடல் நிறைவு பெற்றது.


Next Story