பதிவுத் தபால் சேவை செப்டம்பர் 1-ந் தேதி முதல் நிறுத்தம் - அஞ்சல் துறை அறிவிப்பு

இந்தியாவில் தபால் சேவை 1856-ம் ஆண்டு தொடங்கியது.
"சார்.. தபால்", "சார்.. போஸ்ட்" என்ற கம்பீர குரலை கேட்ட காலம் போய் 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த கர்ஜனை குரலுக்கு சொந்தக்காரர், காவலர் போல் மிடுக்கான காக்கி உடையில், பை நிறைய தபால்களுடன் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் சைக்கிளில் வந்து கடிதங்களை பட்டுவாடா செய்யும் தபால்காரர் தான்.
எழுதப்படிக்க தெரியாத பாமர மக்களுக்கு வரும் கடிதத்தைக்கூட, பிரித்து படித்து காட்டி விளக்கி கூறும் வாத்தியார்களும் தபால்காரர்களே. இப்படி, மதிப்புமிக்கவர்களாக சமூகத்தில் வலம் வந்த தபால்காரர்களின் மவுசு எப்போது செல்போன் வந்ததோ அதன்பிறகு குறையத் தொடங்கிவிட்டது.
போஸ்ட் கார்டு, இன்லேண்ட் லெட்டர் பயன்பாடும் குறைந்து, மங்கி, மறைந்து போய்விட்டன. முக்கிய சாலைகளின் அடையாளமாக ஆங்காங்கே சிகப்பு நிறத்தில் இருந்த தபால் பெட்டிகளும் படிப்படியாக காணாமல் போய்விட்டன.
ஒரு சில இடங்களில் மட்டும் அவை காட்சிப் பொருளாக பொழிவு இழந்து நிற்கின்றன. இந்தியாவில் தபால் சேவை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1856-ம் ஆண்டு தொடங்கியது. அந்த நேரத்தில், தபால் பெட்டிகளும் மக்கள் கண்களில் படும்படி ஊருக்கு ஒன்று நிறுவப்பட்டன.
ஆரம்பத்தில் மரப்பெட்டியாகவும், பிறகு இரும்புப் பெட்டியாகவும் அவை உருமாறின. இந்தியாவில் அஞ்சல் அட்டை (போஸ்ட் கார்டு) 1879-ம் ஆண்டும், பதிவு தபால் சேவை 1898-ம் ஆண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. இடையில் இன்லேண்ட் லெட்டர் (Inland letter) வருகையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், எலக்ரானிக் உலகில் புரட்சி வரவான செல்போன், நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இவை அனைத்தையும் அழிக்கத் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் அஞ்சல் அட்டை, இன்லேண்ட் லெட்டரை தொடர்ந்து 128 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பதிவுத் தபால் (Registered post) சேவையும் இப்போது முடிவுக்கு வருகிறது.
அதாவது, பதிவுத் தபாலுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாத காரணத்தால், வரும் செப்டம்பர் 1-ந் தேதியுடன் விரைவு தபால் (speed post) சேவையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
இதுவரை, பதிவுத் தபால்கள் மூலம் அரசு கடிதம், அரசு ஆணை, நீதிமன்ற ஆணை, வங்கி கடிதம், பாஸ்போர்ட் ஆகியவை அனுப்பப்பட்டு வந்தன. அதற்கு கட்டணமாக ரூ.26 வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பதிவுத் தபாலை எங்கு வேண்டுமானாலும் இதே கட்டணத்தில் அனுப்ப முடியும். தபாலின் எடை கூடினால் மட்டுமே இந்தக் கட்டணம் மாறும். அதே நேரத்தில், பதிவுத் தபாலை, அதில் குறிப்பிட்டுள்ள நபர் மட்டுமே கையெழுத்து போட்டு வாங்க முடியும்.
ஆனால், விரைவுத் தபால் (speed post) அனுப்ப கட்டணம் ரூ.41 ஆகும். தூரத்திற்கு ஏற்பவும், தபாலின் எடைக்கு ஏற்பவும் கட்டணம் மாறுபடும். அதே நேரத்தில், விரைவுத் தபாலை, அதில் குறிப்பிட்ட நபர் அல்லாமல், மற்றவர்களும் கையெழுத்து போட்டு வாங்கலாம். இதனால், பதிவுத் தபால் சேவையை நிறுத்தும் அஞ்சல் துறையின் முடிவுக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.






