புரிந்துகொள்வோம் - புவிசார் குறியீடு


புரிந்துகொள்வோம் - புவிசார் குறியீடு
x

ஒவ்வொரு ஊருக்கென்று தனித்துவமான மற்றும் சிறப்பு பண்புகளுடன், அந்த ஊரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்ககூடிய தயாரிப்புகள் பல உள்ளன.

புவிசார் குறியீடு பெறுவது எப்படி?

புவிசார் குறியீடு பெறுவதற்கு முதலில் நாம் குறிப்பிடும் பொருளுக்கான விவரக்குறிப்பு, விளக்கம், பொருளின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெறும் உற்பத்தி முறை, தனித்துவம், பொருளுக்கான சிறப்பு தன்மை, சிறப்பு மூலபொருட்கள், வேளாண் அல்லது இயற்கை பொருட்களாக இருந்தால் அது உற்பத்தியாக கூடிய காலநிலை விவரங்கள், கைவினைப் பொருட்களாக இருந்தால் அதை தயாரிக்கும் கலைஞர்களின் தனித்துவமான திறன், எந்த பகுதியில் உற்பத்தியாகிறது போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முறையான ஆவணங்களை சென்னை அறிவுசார் சொத்துரிமை அலுவலக கட்டிடத்தில் உள்ள புவிசார் குறியீடு பதிவேட்டு அலுவலகத்தில் நாம் சமர்பிக்க வேண்டும்.

அதில் முக்கியமாக அந்த பொருட்களுக்கு இருக்கும் வரலாற்று சிறப்புகளை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களையும் நாம் அளிக்க வேண்டும். பாரம்பரியமாகவே அந்த பொருட்கள் சிறப்பு தன்மை வாய்ந்ததாக விளங்கி வருகிறது என்பதை குறிப்பிட வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சில மாதங்களில் மத்திய அரசின் குழுவால் பொருட்களினுடைய உற்பத்தி முறைகள் குறித்து மேலும் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதிலை நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதன்பிறகு 7 பேருக்கு குறையாத நபர்களால் ஒரு குழு அமைக்கப்படும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் இந்த குழுவில் இருப்பார்கள். அவர்களின் முன்னிலையில் நாம் நம்முடைய பொருட்கள் குறித்த சிறப்பு தன்மையை நேரில் விளக்க வேண்டும். நம்முடைய பதில்கள் அவர்களுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் சில மாதங்களில் நம்முடைய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவது குறித்த தகவல் மத்திய அரசு நாளிதழில் வெளியிடப்படும். ஒரு மாதத்திற்கு பின் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்ட பிறகு, அதிகாரப்பூர்வமாக புவிசார் குறியீடு வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

திருநெல்வேலி என்ற சொல்லை உச்சரித்தவுடன் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அல்வா தான். அதேபோல் திருப்பதி என்றால் லட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றால் பால்கோவா, ஊட்டி என்றால் வர்க்கி, சிவகாசி என்றால் பட்டாசு. இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

இப்படி ஒவ்வொரு ஊருக்கென்று தனித் துவமான மற்றும் சிறப்பு பண்புகளுடன், அந்த ஊரில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்ககூடிய தயாரிப்புகள் பல உள்ளன. இவை பல நூற்றாண்டுகளாக மனித நாகரிகத்தின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஏன்.... ஆங்கிலேயர்கள் நமது பாரத தேசத்தின் மீது படையெடுத்தது கேரளாவில் விளையக்கூடிய மிளகுக்காக என்று நாம் கூற கேட்டதும் உண்டு. இதுபோன்று அந்தந்த ஊருக்கென பேர் பெற்ற தயாரிப்புகள் காலப்போக்கில் உலக அளவிலும் பிரபலம் அடைந்துள்ளது.

இப்படி நிபுணத்துவம் வாய்ந்த தனித்துவமான தயாரிப்புகளின் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்தபோது, அதேபோல் போலியான பொருட்களும் அதிகரிக்க தொடங்கியது. இது அந்த அசல் தயாரிப்புகளின் உண்மை தன்மையை சிதைக்க கூடியதாகவே இருந்தது. இந்த போலிகளில் இருந்து நயமான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கவும், பொருட்களின் உண்மையான உற்பத்தியாளர்களை பாதுகாப்பதற்கு ஒரு வழிவகை செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதன் விளைவாக உருவெடுத்ததே இந்த புவிசார் குறியீடு.

மண் சார்ந்த சிறப்பம்சங்கள்

ஒரு குறிப்பிட்ட ஊரில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு, அந்த ஊரின் புகழ், மண் சார்ந்த சிறப்பம்சங்கள், குணாதிசயங்கள் கொண்டுள்ள பொருட்களுக்கு வழங்கப்படும் ஒரு அங்கீகாரம் தான் புவிசார் குறியீடு. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஊரை பிறப்பிடமாக கொண்டு அங்கு விளையக்கூடிய அல்லது உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு உரிமை கோருதலே புவிசார் குறியீடு எனலாம்.

இப்படி ஒரு ஊரின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் கைவினை நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு பொருட்களின் அடையாளத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்கு விதை போட்டது எது?. வரலாற்றை சற்று பின் நோக்கி பார்ப்போம்!.

ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த கத்தோலிக்க திருச்சபை ஒரு வகை ஒயினை தயாரித்தது. இந்த ஒயின் அந்த காலகட்டத்தில் பிரபலமடைந்து, மக்களிடம் வரவேற்பையும் பெற்றது. இது அவர்களின் ஒயின் தயாரிக்கும் திறன், முறைகள் மற்றும் வகைகளுக்கு அங்கீகாரமும் வழங்கியது.

இந்தநிலையில் இந்த ஒயினின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. இந்த தேவையின் காரணமாக இதேபோல் போலி, கலப்பட ஒயின்கள் வரத்தொடங்கி உள்ளன. இது அந்த உண்மையான தயாரிப்பளர்களை வேதனை அடைய செய்தது.

மேலும் கலப்பட மற்றும் போலி தயாரிப்பாளர்களிடம் இருந்து தனித்துவமான தங்கள் தயாரிப்பை பாதுகாக்கவும், அசல் தயாரிப்பை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்லவும் ஏதேனும் பாதுகாப்பு திட்டங்கள் வகுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதுவே உலகில் முதன்முதலில் புவிசார் குறியீடு பாதுகாப்பு சட்டத்துக்கு வழிவகை செய்த தயாரிப்பு ஆகும்.




7 பிரிவுகளை உள்ளடக்கியது

மனிதன் தயாரிக்கும் அல்லது உருவாக்கும் தனித்துவமான தயாரிப்புகள் அவனின் அறிவு குழந்தையாகவே இருக்கிறது. இப்படி அவன் அதற்கென தன்னை வருத்தி அறிவால் உருவாக்கிய பொருட்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் அறிவுசார் சொத்துரிமைகள் எனப்படுகின்றன.

இந்த அறிவுசார் சொத்துரிமைகள் பதிப்புரிமை(புத்தகம், இசை), காப்புரிமை(அறிவியல் கண்டுபிடிப்புகள்), வர்த்தக முத்திரைகள்(நிறுவனங்களின் லோகோக்கள்), புவிசார் குறியீடு, தொழில்துறை வடிவமைப்புகள், வர்த்தக ரகசியங்கள், சர்க்யூட்டுகள்(எலக்ட்ரானிக் சிப்புகள்) என 7 பிரிவுகளை உள்ளடக்கியது.

இந்த அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாப்புக்கு வித்திட்டது உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே இயற்றப்பட்ட 'வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை'(டிரிப்ஸ்) ஒப்பந்தமே என்று சொல்லப்படுகிறது. இந்த டிரிப்ஸ் ஒப்பந்தம் 1995-ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு சார்பில் அதன் உறுப்பு நாடுகளுக்கிடையே இயற்றப்பட்டது.

பாசுமதி அரிசி

பாசுமதி அரிசி நம் பாரத தேசத்துடன் பிணைந்த ஒரு விளைபொருள் என்பது நாம் அறிந்ததே. பாசுமதி என்ற இந்தி வார்த்தைக்கு, நறுமணம் என பொருள். இந்த நறுமணம் மிக்க பாசுமதி அரிசி என்றால் உலக மக்கள் நினைவிற்கு முதலில் வருவது பஞ்சாப் மாநிலம் தான். இப்படி இந்திய தேசத்தின் ஓர் அடையாளமாக, பஞ்சாபியர்களின் பாரம்பரியமாக இருக்கும் பாசுமதியின் ஒரு ரகத்திற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளது.

இது இந்தியர்கள் மத்தியில் அறிவுசார் சொத்துரிமைகளுக்கான பாதுகாப்பு, பாரம்பரிய அறிவை தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்தியது. இந்த பாசுமதி அரிசி அபகரிப்பு என்பது நமது தேசத்தின் சிறப்பு மிக்க பொருட்களை பாதுகாப்பதற்கு அன்றைய காலகட்டத்தில் போதிய அளவு சட்டங்கள் நம் நாட்டில் இல்லாததை குறிப்பதாக இருந்தது. இதையடுத்து கடந்த 1999-ம் ஆண்டு சரக்கு மற்றும் பொருட்களுக்கான புவிசார் குறியீடு(பதிவு மற்றும் பாதுகாப்பு) என்ற சட்டம் இயற்றப்பட்டது.

முதல் சட்டம்

புவிசார் குறியீடுக்கான முதல் சட்டம் 1824-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இயற்றப்பட்டது. அதைதொடர்ந்து ஒரு பொருளின் பிறப்பிடத்தை அதன் பெயருடன் அடையாளமாய் இணைத்து பயன்படுத்தும் சட்டம் 1919-ம் ஆண்டு பிரான்சிலேயே இயற்றப்பட்டது. வரலாற்றுபடி ஐரோப்பிய திருச்சபையின் ஒயின் முதல் புவிசார் குறியீடு பெற்ற பொருளாக கருதப்பட்டாலும், புவிசார் குறியீடுக்கான சற்று தெளிவான சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகு முதல் புவிசார் குறியீடு பெற்ற பொருளாக கருதப்படுவது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'ரோக்போர்ட் சீஸ்'(பாலாடைக்கட்டி) ஆகும்.

இந்தியாவில் இயற்றப்பட்ட சரக்கு மற்றும் பொருட்களுக்கான புவிசார் குறியீடு(பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 'மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிவுசார் சொத்துரிமை துறை' இந்த புவிசார் குறியீடை வழங்குகிறது.

இந்தியாவில் கொல்கத்தா, புதுடெல்லி, மும்பை மற்றும் சென்னையில் காப்புரிமை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் புவிசார் குறியீடுக்கான தலைமையகமாக சென்னை அலுவலகமே விளங்குகிறது. இந்த அலுவலகத்தில் தான் புவிசார் குறியீடுக்கான பதிவும் அதற்கான பாதுகாப்பும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவைகளாக கூறப்படுகின்றன.

481 புவிசார் குறியீடுகள்...

உலக அளவில் 2018-ம் ஆண்டு நிலவரப்படி 65 ஆயிரத்து 900 புவிசார் குறியீடுகள் இருப்பதாக உலக அறிவுசார் சொத்துகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய அளவில் இதுவரை 481 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருள் 'டார்ஜிலிங் தேயிலை'. இந்த தேயிலையின் தனித்துவமாக கருதப்படுவது அதன் சுவை மற்றும் மணம்.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 610 முதல் 2134 மீட்டர் உயரத்தில் இந்த தேயிலை வளர்க்கப்படுகிறது. மேலும் இந்த பகுதியின் தட்பவெட்ப நிலை அதாவது மிதமான மேகத்துடன் கூடிய வெயில், இயற்கையாக அமைந்த மழைநீர் வடிகால் அமைப்பு ஆகியவை இந்த தனித்துவமான சுவைக்கான காரணமாக சொல்லப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 'டார்ஜிலிங் தேயிலைக்கு' மட்டுமின்றி அதன் லோகோவுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலிடம்

இந்திய அளவில் 58 புவிசார் குறியீடுகளுடன் தமிழ்நாடு முதல் இடத்தில் வகிக்கிறது. 48 புவிசார் குறியீடுகளுடன் உத்தரபிரதேசம் இரண்டாம் இடத்திலும், 46 புவிசார் குறியீடுகளுடன் கர்நாடக முன்றாம் இடத்திலும் உள்ளன. இவர்களை தொடர்ந்து மற்ற மாநிலங்களான கேரளா-35, மகாராஷ்டிரா-31, மேற்கு வங்காளம்-21, மத்திய பிரதேசம்-20, குஜராத், ஒடிசா-தலா 17, தெலுங்கானா-16, ராஜஸ்தான், பீகார்-தலா 15 என கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களும் குறைந்தபட்சம் தங்கள் பகுதியில் உள்ள ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

தமிழகத்தில் உள்ள 58 பொருட்களில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், வீரவநல்லூர் செடிபுட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி ஆகியவை அண்மையில் அங்கீகரிக்கப்பட்டவை. ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதற்கு காரணம் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு எந்த வித நவீன தொழில்நுட்பமும் இன்றி கைகளாலேயே அவை தயாரிக்கப்படுவதால்.

இந்த நிபுணத்துவம் ஜடேரி மக்களிடம் மட்டுமே காணப்படுகிறது. மேலும் இந்த பகுதியின் பருவநிலை வெகுவாக துணை புரிகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த பகுதியின் முதன்மை தொழிலாக கருதப்படுவது நாமக்கட்டி தயாரிப்பதே. விவசாயம் இதற்கு அடுத்து தான்.

வேறு யாரும் தயாரிக்க முடியாது

உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோருக்கு பல்வேறு பலன்களை புவிசார் குறியீடு அளிக்கிறது. புவிசார் குறியீடு பெறுவதன் மூலம் ஒரு ஊரின் மண்சார்ந்த பாரம்பரிய அறிவு, கலாசாரம் மற்றும் கைவினைத்திறன் ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. மேலும் இது கலாசார அடையாளத்தை முன் எடுத்து செல்வதோடு பாரம்பரிய நடைமுறைகளை தொடர்ந்து செய்துவரவும் ஊக்குவிக்கிறது.

புவிசார் குறியீடு, நுகர்வோருக்கு அந்த தயாரிப்புகள் மற்றும் பொருட்கள் மீது நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் வழங்குகிறது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு கிடைக்கும் எனில் அந்த ஊர் மக்களை தவிர வேறு ஊர் மக்கள் அந்தப் பெயரை பயன்படுத்தி அந்த பொருளை தயாரிக்க முடியாது. இதன் மூலம் போலிகள் தயாரிப்பது தடுக்கப்படுவது மட்டுமின்றி அந்த ஊர் தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைகிறது.

மேலும் அதன் மூலம் அந்த பொருளை வாங்குவதற்கு அந்த ஊரைத் தேடி மக்கள் வருவார்கள். இதனால் அந்த பொருளின் ஏற்றுமதி அதிகரிக்கும். இதனால் உற்பத்தி பெருகும். அந்த பொருளுக்கும், அந்த மக்களுக்குமான வரலாற்று பிணைப்பு மாறாமல் பாதுகாக்கப்படும். பொருட்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பும் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் சட்ட பாதுகாப்பும் புவிசார் குறியீட்டினால் கிடைக்கப்படுவது மேலும் பயனுள்ளதாகின்றது.

மண்சார்ந்த பொருட்கள் மீதான விருப்பம் கொண்ட ஆர்வலர்கள் அதனை தேடிச்சென்று வாங்குவதால் சுற்றுலாதுறையை மேம்படுத்துவதற்கு இது துணை புரிகிறது. பாரம்பரிய விளைபொருட்களின் ரகங்களை பாதுகாப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. பல பாரம்பரிய தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பல வகையில் இந்த புவிசார் குறியீடு உதவுகிறது.

பொருளாதாரம் நாம் வாழ்வதற்கு பாதுகாக்க வேண்டிய ஒன்றாக இருந்தாலும், நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாய் திகழ்வது நாம் பாதுகாத்து வந்த பாரம்பரியமே. எனவே நீங்கள் மட்டுமே அறிந்த உங்கள் ஊர் பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று அதை உலக அரங்கிற்கு எடுத்து செல்ல ஒவ்வொருவரும் முயற்சிக்கலாமே.


Next Story