குழந்தைகள் அழுகைக்கான காரணங்களும்.. தீர்வுகளும்..!

எப்போதும் குழந்தைகளின் உடல்நிலையை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
குழந்தைகள் பேசுவதற்கு முன்பு தங்களது தேவையையும், உடலில் ஏற்படும் தொந்தரவுகளையும் தெரிவிக்க பயன்படும் மொழியாக இருப்பது அழுகை. இது குழந்தைகளின் இயல்புகளில் ஒன்று. குழந்தைகள் அழுவது குறித்து கவலைப்படாமல் எதற்காக அழுகிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என்பதை கண்டறிய உதவிடும் சில காரணங்களை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்.
பாதுகாப்பு
குழந்தைகள் சில நேரத்தில் பாதுகாப்பற்ற சூழலை உணர்ந்தால் அழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தூங்குகிறபோது திடீரென்று எழுந்து அழலாம். அந்த நேரத்தில் தொட்டிலை ஆட்டுங்கள். குழந்தையை தூக்கி கொஞ்சலாம். கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது பெற்றோர் அருகில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அழுகையை நிறுத்துவார்கள்.
உடல்நிலை
குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிற சூழலில் வழக்கத்தை விட வித்தியாசமான முறையில் அழுவார்கள். அப்போது அவர்களின் அழுகை பலவீனமாகவும் சத்தம் குறைவாகவும் இருக்கும். எனவே அத்தகைய சூழல்களில் கவனமாக இருக்க வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் குழந்தைகளை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். எப்போதும் குழந்தைகளின் உடல்நிலையை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பசி
பிறந்த குழந்தைகள் அழுவதற்கான காரணங்களில் முக்கியமானது பசி. உங்கள் குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால் முதலில் அதற்கு பால் கொடுத்த நேரத்தை கவனத்தில் கொண்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் பால் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தான் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. அதை மட்டுமே குழந்தைகள் பிறந்த தொடக்க மாதங்களில் உணவாக கொடுக்க வேண்டும்.
சோர்வு
உடல் சோர்வாக இருந்தாலும் குழந்தைகள் அழுவார்கள். தூங்குவதற்கு சிரமப்படுவார்கள். எனவே அவர்களது உடலுக்கு மெதுவாக மசாஜ் செய்யலாம். அவர்கள் வசதியாக படுப்பதற்கு ஏதுவாக தொட்டிலில் உறங்க வைக்கலாம்.
வாயுத்தொல்லை
ஒரு சில குழந்தைகள் பால் குடித்த பிறகு அழ ஆரம்பித்தால், அவர்களுக்கு வாயுத்தொல்லை இருக்கலாம். வாயு என்பது குழந்தையின் வயிற்றில் உள்ள காற்றாகும். பாலூட்டும் போது அதை விழுங்குவதால் அழுவார்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஏப்பம் வந்த பிறகு அழுகையை நிறுத்தி விடுவார்கள்.
ஒரே இடத்தில் இருப்பது
குழந்தைகள் ஒரே இடத்தில் தொடர்ந்து இருப்பதாலும் அழுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே வீட்டிற்கு அருகில் கற்றோட்டமான இடத்தில் நடக்க வைக்கலாம். அருகில் உள்ள பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லலாம். இப்படி செய்வதன் மூலம் குழந்தைகளின் அழுகையை கட்டுப்படுத்தலாம்.
ஆடைகள்
குழந்தைகள் அழுவதற்கு அவர்கள் அணிகிற ஆடைகளும் காரணமாக இருக்கின்றன. கால நிலைக்கு ஏற்ப குழந்தைகளுக்கு ஆடைகளை அணிவிக்க வேண்டும். வெயில் நேரங்களில் காற்று புகாதவாறு தடிமனான ஆடைகள் அணிவதால் உடல் வெப்பத்தால் குழந்தைகள் அழலாம். எனவே அந்த நேரங்களில் மெல்லிய ஆடைகளை அணிவிக்கலாம். அதுபோல் குளிர் நேரங்களில் உடல் குளிர்ச்சியால் குழந்தை அழும் தருணங்களில் குளிரை தாங்குகிற ஆடைகளை பயன்படுத்துங்கள்.
குழந்தைகள் சில நேரங்களில் ஆடைகளில் சிறுநீர் அல்லது மலம் கழித்துவிடலாம். அந்த நேரங்களிலும் அழுவார்கள். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக சுத்தம் செய்து ஆடைகளை மாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதனை அவசரமான சூழல்களுக்கு மட்டும் பயன்படுத்திவிட்டு உடனடியாக மாற்றிவிட வேண்டும்.






