பாதுகாப்பான நாய் வளர்ப்பு முறைகள்


பாதுகாப்பான நாய் வளர்ப்பு முறைகள்
x

பாதுகாப்பான நாய் வளர்ப்பு முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் எப்போதுமே ஒரு காதல் இருந்து வருகிறது. வீட்டில் ஆடு, மாடு, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளை வளர்க்கும் ஆர்வம் நம்மிடையே உள்ளது. முக்கியமாக, விதவிதமான வெளிநாட்டு நாய்கள், கம்பீரமாக உள்ளூர் நாய்களை வளர்ப்பதில் இன்றையை தலைமுறையினரிடையே ஆர்வம் அதிகமாகவே உள்ளது. அந்த நாயுடன் குளிப்பது, சாப்பிடுவது, தூங்குவது என, வீட்டில் ஒரு நபராகவே நாய்கள் மாறி வருகின்றன. நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடடுவதும், அதே நாய் தொலைந்து போனால் போஸ்டர் அடித்து தேடுவதும், இறந்தால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வரையில் சென்றுவிட்டது. இன்று பலரது வீடுகளில் குழந்தைகளுக்கு நிகரான இடத்தை நாய்களும் பெற்றுள்ளன. மக்களுக்கு நாய் வளர்ப்பதன் மீதுள்ள ஆர்வத்தால் நாய்களுக்கான விற்பனையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மேலும், நாய்கள் பராமரிப்பது குறித்து பொதுவான விசயங்களை அறிந்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, நாய்க் குட்டிகளைச் சுத்தமான இடத்தில் கட்டிப் போட்டு பராமரிக்க வேண்டும். அதற்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கும் பாத்திரத்தினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நாய்கள் அறிவுள்ள வளர்ப்புப் பிராணி. நம்முடைய கோபம், சந்தோஷத்தைக் கூட புரிந்து கொள்ளும் இயல்புடையவை. குட்டிகளைப் பேர் சொல்லி அழைத்தால் இயல்பான குரலாகவும், எதாவது தவறு செய்தால் தவறை சுட்டிக் காட்டும் விதத்தில் கட்டளைக் குரலாகவும், சொன்ன பேச்சைக் கேட்டால் பாராட்டு தரும் வகையிலும் பேசினால் நாய்க்குட்டிகளை நமக்கு ஏற்ற விதத்தில் பழக்க முடியும்.

நாய்க்குட்டிக்கென்று நேரம் ஒதுக்கி, வெளியில் யாருக்கும் தொந்தரவு இல்லாத இடத்தில் மலம் கழிக்க உரிய இடத்தைத் தேர்வு செய்து பழக்க வேண்டும். நாய்க்குட்டிகள் பற்கள் முளைக்கத் துவங்கும் போது கண்ட பொருட்களையும் கடிக்கத் துவங்கும்.அத்தகைய நேரத்தில் நாம் கேரட் அல்லது கடிக்க முடியாத எலும்புத் துண்டுகளைப் போட்டால் அதனைக் கடித்துக் கொண்டிருக்கும். வீட்டில் உள்ள பொருட்களைக் கடிக்கும் போது உரத்தச் சத்தத்தில் கட்டளை இட்டால் திருத்திக் கொள்ளும்.

எல்லாவற்றிலும் திறமையான நாய் ஒருவர் கொடுக்கும் நஞ்சு உணவைச் சாப்பிட்டு விட்டால் அது கற்றதெல்லாம் வீண் தான். எனவே வீட்டில் உள்ள குழந்தையிடம் தெரியாதவர் கொடுக்கும் பொருளை வாங்கக் கூடாது என சொல்லிக் கொடுப்பது போல நாம் வளர்க்கும் நாய்க்கும் சொல்லி பழக்கப்படுத்த வேண்டும். கீழே கிடக்கும் பொருட்களைச் சாப்பிடவும் பழக்க கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் உபாதைகளுக்கு உள்ளாக நேரிடும். அவ்வாறு செய்தால் உடனே கண்டித்துத் திருத்த வேண்டும். மாதம் ஒருமுறை காதுகளைச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லையேல் துர்நாற்றம் ஏற்படக் கூடும். வாரம் ஒரு முறை குளிப்பாட்ட வேண்டும். அதற்கான ஷாம்பூ, சோப்புகளையே பயன்படுத்த வேண்டும். வெறிநாய் தடுப்பூசி போன்ற தடுப்பூசிகளை அவ்வப்போது போட்டு பராமரிக்க வேண்டும்.

நாய் குட்டிகளுடன் நாம் நேரம் செலவிட வேண்டும். அப்போது தான் தன் எஜமான் யாரென்று நாய்க்குட்டிகளுக்குத் தெரியும். வலுவான பாசப்பிணைப்பு உண்டாகும். சொல்லுக்குக் கீழ்ப்படியும். உயிர்கொடுக்கும் தோழனாகவும் மாறும். எத்தனை நாள் பிரிந்திருந்து சந்தித்தாலும் மனிதனைப் போல் அல்லாது உப்பிட்டவரை மறவாது நினைத்திருக்கும். தனிமையில் இருப்பவர்களுக்கு நாய் ஒரு வரப்பிரசாதம். தனிமையை மறக்கடித்து மனநிம்மதி தரும். பொதுவாகச் செடி வளர்ப்பு, செல்லப் பிராணிகள் வளர்ப்பு போன்றவை சிலருக்குப் பொருளாதார லாபம் ஈட்டுவதாக இருந்தாலும், அவற்றை மேற்கொள்ளும் எல்லாருக்கும் மனமகிழ்வைத் தந்திடும் ஒரு நிறைவான செயல்தான்.

நாய்கள் ஏன் நம்மை நக்குகின்றன என்பது குறித்து தெரியுமா?. பொதுவாக மோப்பமிடுவது, வாலை ஆட்டுவது, குரைப்பது போன்றவை நாய்களின் இயல்பான மொழி. மனிதனாக இருந்தாலும், வேறு உயிரினமாக இருந்தாலும் அவை இந்தச் செயல்களின் மூலமே தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், நமது முகம், அக்குள், அந்தரங்கப் பகுதி ஆகியவற்றை மோப்பம் பிடிப்பதால் நாய்கள் நம்மைப் பற்றிய பல தகவல்களைப் பெறுகின்றன. என்ன சாப்பிட்டோம், எங்கு சென்று வந்தோம், என்ன மனநிலையில் இருக்கிறோம் போன்றவற்றைக் கூட அவற்றால் உணர முடியும். மேலும், ஒரு நாய் மற்றொரு நாயைப் பார்த்தால் தன் மொழியில் உரையாடும். அவற்றின் உடல் பாகங்களை நக்குவது, விளையாட்டாகக் கடிப்பது போலத்தான் நம்மிடமும் அதீத அன்பின் வெளிபாடாக நம் முகத்தை நக்குகிறது. சில நேரங்ளில் உங்கள் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் முகம் மற்றும் கைகளை நக்கும்.

மனிதர்களை நாய்கள் நக்குவது ஒருவித அன்பு என்று எடுத்துக் கொண்டாலும், அதில் பல்வேறு ஆபத்துகள் புதைந்துள்ளன. வீட்டில் வளர்க்கும் நாய் உங்களை அதிகமாக நக்கிக் கொண்டே இருந்தால் அதை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். முதலில் நாய்கள் உங்கள் முகத்திற்கு அருகில் வரும்போது அதை ஊக்கப்படுத்தாதீர்கள். முத்தமிடுவதற்குப் பதிலாக அதனுடன் கை குலுக்குங்கள்.

அதனுடன் தொட்டு விளையாடும் போக்கை சிறுகச் சிறுகக் குறைக்க வேண்டும்.

ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்கள் நாய்களின் முடி உதிர்வதைப் பற்றிக் கவனமாக இருக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே அன்றாடம் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என அவற்றுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். எந்தவொரு நாய் உரிமையாளரும் தங்களது நாய்களுக்குத் தினமும் பல் துலக்கிவிடுவது இல்லை, அதனால் நாய்களின் பல் இடுக்குகளில் கிருமிகள் இருக்கும்.

நாய்களுக்கு குடல் புழுக்கள் அதிகமாக இருக்கும். அவற்றோடு பழகப் பழக நமக்கும் இந்தத் தாக்கம் ஏற்படக்கூடும். சருமம் தொடர்பான பல நோய்கள் ஏற்படக்கூடும். நாய் போலவே, பூனை, குதிரை, பன்றி, எலி என மேலும் பல விலங்குகளில் இருந்து லெப்டோஸ்பீரோசிஸ் என்ற பாக்டீரியா பரவக் கூடும். இது விலங்குகளின் சிறுநீர் மற்றும் உமிழ்நீரால் பரவுகிறது. மனிதர்களின் மூக்கு, வாய், கண்கள் மற்றும் தோலில் காயங்கள் ஏதேனும் இருந்தால் அதன் மூலம் மனிதர்களுக்கும் பரவும். இதன் தாக்கமாகக் காய்ச்சல், மஞ்சள் காமாலை, கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படக்கூடும். இதைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது மிகவும் அவசியம். தொற்றுகளுக்குப் பயந்து நாய்களோடு பழகாமல் இருப்பதும் தவறு, அதே நேரம் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நாய் வாங்கும் முன் கற்றுக்கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளமாக உள்ளன. ஒரு கட்டத்தில் நாய்கள் கண்டிப்பாக மனிதரின் துணையையும் அன்பையும் எதிர்பார்க்கும். அதனால் தொற்றுகளுக்குப் பயந்து அவற்றோடு பழகாமல் இருப்பதும் தவறு. அவற்றோடு விளையாட வேண்டும், அதேவேளையில் சுத்தமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக நாய்களை தங்கள் படுக்கை வரை அனுமதிக்கும் உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் உள்ள யாருக்கும் எந்த நோய் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பைக் வாங்கும் முன் பைக் ஓட்டக் கற்றுக்கொண்டுதான் வாங்குவோம். அதேபோல நாய் வளர்க்கும் முன்பு அதற்குத் தடுப்பூசி போடுவது, குளிப்பாட்டுவது, சீர்ப்படுத்துவது, நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்வது என அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்," என்கின்றனர் மருத்துவர்கள்.

நாய்களை பிறந்த உடனே அவற்றின் தாயிடமிருந்து எடுத்து வளர்க்கக்கூடாது, எனவும் அவை குறைந்தது 60 நாட்களாவது அவற்றின் தாயிடம் இருந்தால்தான் அவற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அவற்றுக்கு 40 நாட்களில் DHPP என்ற தடுப்பூசி போட வேண்டும். அதன் பிறகு வருடத்திற்கு ஒருமுறை தடுப்பூசி போட வேண்டும். நாய்களின் எச்சில் நம் உடலில் எங்கும் படக்கூடாது. குறிப்பாக நம் உடலில் காயம் ஏற்பட்ட இடங்களில். வேறு எதாவது நோய் என்றால் நுண்ணுயிர்க்கொல்லிகளை வைத்து சரி செய்யலாம். ஆனால் ரேபீஸ் நோய்த்தொற்று ஏற்பட்டால் சரி செய்வது மிகவும் கடினம். மேலும், நாய்களுக்குத் தடுப்பூசி போட்டுவிட்டதால் ரேபீஸ் வராது என்று சொல்ல முடியாது. ஏனெனில் ரேபீஸ்க்கு மூன்று வடிவங்கள் இருக்கின்றன. அதில் ஆக்டிவ் ரேபிஸ் அறிகுறிகள் வெளியில் தெரியும். டம்ப் (Dump) எனபடும் வடிவம் வெளியில் தெரியாது. அந்த நாய்களுக்கு ரேபீஸ் இருப்பது அவ்வளவு எளிதாக வெளிப்படையாகத் தெரியாது என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

நாய் நம் கால்களில் கடித்தால் அந்த வைரஸ் தொற்று நரம்பு மண்டலத்தில் இருந்து நம் தலைக்கு ஏற ஒரு மாதமோ, இரண்டு மாதமோ, ஒரு வருடமோகூட ஆகலாம். அதுவே கழுத்தில் கடித்தால் விளைவு உடனே தெரியும். நாய்களுக்கு ஏற்படும் உண்ணித் தொற்றுகளைப் பற்றிப் பேசிய மருத்துவர் சங்கர், ஆண் உண்ணிகள் சிலந்தி போலவும், பெண் உண்ணிகள் வண்டு போலவும் இருக்கும். ஆண் உண்ணிகள் நாய்களின் உடலிலேயே இருக்கும். ஆனால் பெண் உண்ணிகள் இனப்பெருக்கம் முடிந்தவுடன் நாய்களின் உடலில் இருந்து கீழே விழுந்துவிடும். அவை வீட்டில் எங்காவது இடுக்குகளில் தங்கியிருக்கலாம். அவை மனிதர்களின் உடலில் ஏறினால் அது சரும பிரச்னைகளுக்கும் நோய்த் தொற்றுக்கும் வழி வகுக்கும். அதனால் நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் கண்டிப்பாக அதை முறையாகச் சீர்ப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, "வீட்டில் செல்லப் பிராணிகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக அவற்றுக்குக் குடல் புழுக்களை அகற்ற மருத்துவம் செய்ய வேண்டும் என்று எச்சரிக்கின்றனர்.


Next Story