சண்டே ஸ்பெஷல்: பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ்.. விதவிதமான சுவைகளில் டீ தயாரிப்பது எப்படி?

பணி மற்றும் படிப்பு காரணமாக வெளியூரில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பலருக்கு சில சமையல் டிப்ஸ்.
பிளைன் டீ (4 டம்ளர் அளவு)
தேவையான பொருட்கள்
பால் - 2½ டம்ளர்
தண்ணீர் - 1½ டம்ளர்
தேயிலை - 3 ஸ்பூன் (சிறியது)
சர்க்கரை - 6 ஸ்பூன் (சிறியது)
செய்முறை:-
பால் மற்றும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். சற்று சூடானதும், அதனுடன் தேயிலை மற்றும் சர்க்கரையை சேர்க்கவும். நன்கு கொதித்த உடன் அடுப்பை அணைத்துவிடவும். பின்பு, தேயிலையை வடிகட்டவும். சுவையான டீ ரெடி.
ஏலக்காய் டீ
பிளைன் டீயுடன் 4 ஏலக்காயை நன்கு இடித்து, அதாவது ஏலக்காய் உள்ளே இருக்கும் கருப்பு விதைகள் நன்கு உடைபடும் அளவுக்கு இடித்துப் போடவேண்டும். கொதிவந்ததும், அடுப்பில் தீயை குறைக்கவும். சற்று நேரத்தில் டீ பாத்திரத்தை இறக்கவும். மனமனக்கும் ஏலக்காய் டீ ரெடி.
புதினா டீ
பிளைன் டீயுடன் ஒரு கை அளவுக்கு புதினா இழைகளை (நன்கு கழுவியது) போட்டு கொதிக்கவிடவும். சற்று நேரத்தில் இறக்கவும். உடலுக்கு உகந்த புதினா டீ ரெடி.
இஞ்சி டீ
பிளைன் டீயுடன் பெருவிரல் அளவிலான இஞ்சி துண்டை சிறிய அளவிலான உரலில் இடித்து போடவும். இடிப்பதைவிட கேரட் துருவலில் வைத்து இஞ்சியை சீவினால், சிறிய துகள்களாக விழும். அதை பிளைன் டீயில் போட்டு கொதிக்க வைத்தால், விரைவாக இஞ்சி சாறு டீயுடன் கலக்கும். சுவையான இஞ்சி டீ ரெடி.
மசாலா டீ
ஏலக்காய் 3, கிராம்பு 7, மிளகு 10, பட்டை ஒரு துண்டு, பிரியாணிக்கு போடும் நட்சத்திர சோம்பு ஒன்று, இஞ்சி ஒரு துண்டு ஆகியவற்றை சிறிய உரலில் போட்டு பொடியாக இடித்துக்கொள்ளவும். இதில், இஞ்சி ஈரப்பதம் கொண்டது என்பதால், அதை மட்டும் தனியாக இடித்து எடுக்கவும். பிளைன் டீயுடன் இவைகளை போட்டு நன்கு கொதிக்கவிடவும். சுவையான, மனம் மிகுந்த மசாலா டீ ரெடி.






