கரூர் கோட்டையை கைப்பற்ற போர் தொடுத்த ஆங்கிலேயர்கள்


கரூர் கோட்டையை கைப்பற்ற போர் தொடுத்த ஆங்கிலேயர்கள்
x

கரூர் மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கியதாகும். கி.பி. 1-ம் நூற்றாண்டில் சேர மன்னர்கள் கரூரை ஆட்சி செய்தனர். சேர மன்னர்களின் கோட்டை கரூரில் ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆற்றின் வடகரையில் அமைந்திருந்தது.

கரூர் நகரில் கோட்டை மேடு என்ற இடம் அமைந்துள்ளமையும், அங்குள்ள கோவில் கோட்டைக் கோவில் என்றழைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாடு தொல்லியல் துறை கரூர் நகரிலும், ஆன்பொருநை (அமராவதி) ஆற்றங்கரையிலும் மேற்கொண்ட அகழாய்வில் கோட்டை சுவர் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அக்கோட்டை சுவர் செங்கற்கள் கரூர் சேரர் அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கரூரில் இருந்த அக்கோட்டை கி.பி.18-ம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் ஆளுகைக்குட்பட்டிருந்தது.

கி.பி.1800-ல் புக்கானன் கருவூர் பகுதிக்கு வந்தபோது தாராபுரத்தில் ஆட்சி செய்த மேஜர் மேக்லியட் என்ற ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக கரூர் விளங்கியது. ஆங்கிலேய குதிரை படையொன்று கருவூர் கோட்டையை காவல் புரிந்தது. கி.பி.1780 முதல் 1784 வரை நடைபெற்ற இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரின் ஒரு பகுதியாக கரூரிலும் போர் நடைபெற்றது. கி.பி.1783-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திப்பு சுல்தான் ஆளுகைக்குட்பட்டிருந்த கரூர் கோட்டையை கைப்பற்றுவதற்காக, ஆங்கிலேயர்கள் கரூர் மீது போர் தொடுத்தனர்.

இந்தப் போரின் இறுதியில் கரூர் கோட்டை ஆங்கிலேயர் வசமானது. அப்போரில் படைப்பிரிவு தலைவர் ஒருவரும், 19 ஐரோப்பியர்களும் கொல்லப்பட்டதாகவும், 30 போர் வீரர்கள் படுகாயமுற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இந்த கரூர் கோட்டையை கைப்பற்றியதை நினைவுகூரும் வகையிலும், இறந்துபோன போர் வீரர்களின் நினைவாகவும் தாந்தோன்றிமலைக்கு அருகில் உள்ள ராயனூரில் போர் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்நினைவுத்தூண் உருவாகக் காரணமான வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், போர் நினைவுத்தூணில் கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story