இன்று (அக்டோபர் 16) உலக உணவு தினம்...!


இன்று (அக்டோபர் 16) உலக உணவு தினம்...!
x

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ந் தேதி உலக உணவு தினமாக கொண்டாடப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படையான ஒரு விஷயம் என்றால் அது உணவுதான். உணவு மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்து என்பது மனிதன் நோய் நொடியின்றி உயிர்வாழ வழி வகுக்கிறது. அத்தகைய உணவை கொண்டாடுவதற்காகவும், பட்டினியோடு இருக்கும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 16-ந் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் உலகின் சுவையான உணவுகளை குறித்து பேசுவதற்காக மட்டுமில்லாமல், சாப்பிட வாய்ப்பில்லாமல், பசி, பட்டினியோடு இருக்கும் மக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. பல நாடுகளில், குறிப்பாக உலகின் வளர்ச்சியடையாத பகுதிகளில் பட்டினி என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த சிக்கலை தீர்க்க அது பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமாக உள்ளது.


உலக உணவு தினம்:

உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு FAO (Food and Agriculture Organization) 1945-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாளே ஒவ்வொரு ஆண்டும் உலக உணவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கருப்பொருள்:

1981-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளுடன் 'உலக உணவு தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 'தண்ணீரே உயிர், தண்ணீரே உணவு' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இந்த கருப்பொருள் வருங்காலத்துக்கான தண்ணீரின் தேவை மற்றும் அதை இப்போதிலிருந்தே சேமித்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ளது.


உணவு தினம் கொண்டாட முக்கிய காரணம்:

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பசி, பட்டினியால் தவிக்கும் மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். பலருக்கு உணவுகள் கிடைத்தாலும் ஊட்டச்சத்து உள்ள உணவுகள் கிடைப்பது கேள்வி குறியாகவே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின் படி உலகில் பத்தில் ஒருவருக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி , உலகளவில் 5 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை வளர்ச்சி குன்றி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு சரியான ஊட்டச்சத்து இல்லாததே முக்கிய காரணம். மேலும் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு ஐந்தில் ஒரு பங்கு மக்கள் பட்டினியை எதிர்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மக்களுக்கு உணவு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

உணவை வீணாக்க வேண்டாம்:

உலக அளவில் மக்கள் பசி பட்டினியால் வாடும் போது நம்மில் பலர் இங்கு உணவை வீணாக்கி வருகிறோம். இன்றும் பல லட்சம் டன் உணவு தானியங்கள் வீணாகி வருகிறது. இந்தியாவில் திருமணம் போன்ற விழாக்களில் உணவுப் பொருள்கள் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து உணவை வீணடிக்காமல் இருந்தால் மட்டுமே பசி என்ற உலகளாவிய பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.


Next Story