லேப்டாப், டெஸ்க்டாபில் எது சிறந்தது?... எதை வாங்கலாம்? - தெரிந்து கொள்வோம் வாங்க..!

இரண்டில் எதை தேர்ந்தெடுக்க இருக்கிறோம் என்பதை, நம்முடைய பயன்பாடுதான் முடிவு செய்கிறது.
லேப்டாப், டெஸ்க்டாப் இவை இரண்டுமே, நம்முடைய பயன்பாட்டிற்கு அவசியமானவை. ஆனால், இவற்றில் நாம் எதை தேர்ந்தெடுக்க இருக்கிறோம் என்பதை, நம்முடைய பயன்பாடுதான் முடிவு செய்கிறது. சிலர், அவர்களது பயன்பாட்டை முன்னிலைப்படுத்தாமல், கம்ப்யூட்டர் வாங்கும் ஆசையில் சில தவறுகளை செய்துவிடுகிறார்கள். அதனால் அவர்கள் தேர்ந்தெடுக்கும் லேப்டாப், டெஸ்க்டாப் ஆகியவற்றை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியாமல் போகிறது. சரி, எந்தெந்த பயன்பாட்டிற்கு லேப்டாப் வாங்கலாம், எந்த பயன்பாட்டிற்கு டெஸ்க்டாப் வாங்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
* டெஸ்க்டாப்
கம்ப்யூட்டர் என பொதுவாக அழைக்கப்படும் இந்த டெஸ்க்டாப், நீண்ட கால ஆயுளை கொண்டது. அதாவது நீண்ட கால பயன்பாட்டிற்கு கம்ப்யூட்டர் வாங்க ஆசைப்படுபவர்கள், துணிந்து டெஸ்க்டாப் வாங்கலாம்.
லேப்டாப்பை ஒப்பிடுகையில் குறைந்த விலையிலேயே, நல்ல தரமான டெஸ்க்டாப்பை அசெம்பிள் செய்துவிட முடியும். ஆரம்பத்தில் 8 ஜி.பி.ரேம் வசதியுடன் வாங்கும் கம்ப்யூட்டரை தேவைக்கு ஏற்ப 12 ஜி.பி., 16 ஜி.பி. என அப்டேட் செய்ய முடியும். தேவைப்பட்டால் பிராசசர் முதற்கொண்டு எல்லாவற்றையும் தேவைக்கு ஏற்றார்போல புதுப்பிக்கலாம். மேலும், வசதிக்கு ஏற்றார்போல 32 அங்குல மானிட்டர் முதல் 48 அங்குலம் அதற்கும் மேற்பட்ட அகல மானிட்டர்களை கூட பயன்படுத்தலாம்.
* லேப்டாப்
டெஸ்க்டாப்பில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இதை நினைத்த இடங்களுக்கு உடனே எடுத்து செல்லமுடியாத குறைதான், லேப்டாப்பிற்கான மவுசை கூட்டுகிறது. அலுவலகம், வீடு ஆகியவற்றில் டெஸ்க்டாப்பை நிறுவி பணியாற்றலாம். ஆனால் எல்லா இடத்திலும் பணியாற்றும் வாய்ப்பை வழங்குவதால்தான், லேப்டாப்பின் மதிப்பு உயர்ந்திருக்கிறது.
அடிக்கடி வெளியூர்களுக்கு பயணிப்பவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலக ரீதியாக மீட்டிங்கில் அடிக்கடி கலந்து கொள்பவர்களுக்கு லேப்டாப் அவசியமானது. இதையும் நம் தேவைக்கு ஏற்ப புதுப்பிக்கலாம். ஆனால் டெஸ்க்டாப்பை விட, செலவு மிகுந்ததாக இருக்கும். சிறிய திரை, சிறிய கீ-போர்ட், கையடக்க மவுஸ் பேட் போன்றவை லேப்டாப்பின் பிரச்சினைகள் என்றாலும், வீட்டில் பணியாற்றும்போது லேப்டாப் ஸ்கிரீனை பெரிய திரைகளுடன் இணைத்து பணியாற்ற முடியும். கூடவே கீ-போர்ட், மவுசு உள்ளிட்டவற்றையும் தனியாக இணைத்து பயன்படுத்த முடியும்.
* ஆல் இன் 1 பி.சி.
தொழில்நுட்பத்தின் நவீன வடிவமாக வெறும் மானிட்டர் திரை வடிவிலேயே மொத்த கம்ப்யூட்டரும் கிடைப்பதற்கு, ஆல் இன் 1 பி.சி. என்று பெயர். இது டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பின் கலவையாக உருவாகிறது. இதில் டெஸ்க்டாப்பின் பவர்புல்லான செயல்பாடுகளை பெறமுடியும். அதேசமயம், லேப்டாப் போல மிக எளிதாக கொண்டு செல்ல முடியும். ஆனால் இதை ரெயில், பேருந்து பயணங்களின்போது பயன்படுத்த முடியாது என்றாலும், வீடு-அலுவலகங்களில் லேப்டாப்பை போல எளிதாக கையாளலாம். இதன் விலை, டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பிற்கு இடைபட்டதாக இருப்பது, இதன் பிளஸ் பாய்ண்ட்.






