நல வாழ்வுக்கு அடிகோலும் ஆடி மாதம்...!


நல வாழ்வுக்கு அடிகோலும் ஆடி மாதம்...!
x
தினத்தந்தி 3 Aug 2023 8:23 AM GMT (Updated: 3 Aug 2023 10:59 AM GMT)

மனித சமூகம் நல்லவைகளை பெற வேண்டும், அவற்றை பாதுகாக்க வேண்டும். தீயவற்றை வளர விடாமல் அழிக்க வேண்டும் என்ற மனதோடு போராடுவதற்கான களம் இந்த உலகம். அத்துடன், நம்மை நல்வழிப்படுத்திக் கொள்வதற்காக சொந்த முயற்சியுடன் இறை சக்தியின் அருளும் அவசியம். அதனால்தான் நமது முன்னோர்கள் வழிபாடுகள், பண்டிகைகள், விழாக்கள் மூலம் கலாச்சாரமாக நமது வாழ்க்கையை நெறிப்படுத்தினார்கள்.

அந்த வகையில், ஒரு வருடத்தை போக சம்பிரதாயம், யோக சம்பிரதாயம் என இரு பிரிவாக ஆக்கினார்கள். போக சம்பிரதாயம் என்பது தை முதல் ஆனி வரை உள்ள காலம். யோக சம்பிரதாயம் என்பது ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம். போக சம்பிரதாயத்தில் கல்யாணம், விருந்து, விசேஷங்கள் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் களைகட்டும்.

யோக சம்பிரதாய காலத்தில் பூஜை, வழிபாடு, பிரார்த்தனை, யாகம் என்று இருக்கும். ஆடி மாத தொடக்கத்திலிருந்தே, ஆடி பிறப்பு, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பௌர்ணமி, ஆடித்தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப்பூரம் என்று அந்த மாதம் முழுதும் பொதுப் பண்டிகைகளாக இருக்கும்.

ஆடிப் பிறப்பு நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் அரிசி மாவினால் கோலம் இட்டு, மாவிலை தோரணம் கட்டி வீட்டினை பெண்கள் தூய்மைப்படுத்துவர். ஆடி மாதம் முதல் நாளில் கோவிலுக்குச் சென்று வருவர். பாயாசம், வடை, பொங்கல் என விருந்து நடைபெறும். புதிதாய் திருமணம் நடந்த பெண், மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைத்து தாலிக்கயிறு மாற்றும் சம்பிரதாயம் உண்டு.

ஆடிப் பட்டம் தேடி விதை, ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்., ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை, ஆடிக் கூழ் அமிர்தமாகும், ஆடிச்செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசி குளி என்ற பழமொழிகள் ஆடி மாதத்தின் சடங்கு சம்பிரதாயங்களை குறிப்பிடுபவையாக உள்ளன.

பஞ்ச பாண்டவர்கள் பாரத போருக்கு கிளம்பிய முதல் நாளாக ஆடி மாத தொடக்கம் கூறப்படுகிறது. பாண்டவர்கள் போரில் வெற்றி பெறுவதற்காக, போருக்கு முன் களப்பலியாக அரவாணை பலியிட்டு, அவன் தலையை வைத்து பூஜை செய்துவிட்டு, போரை ஆரம்பித்தனர்.

அந்த சம்பிரதாயத்தை வெளிப்படுத்தும் விதமாக சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதாவது, ஆடி முதல் நாளில், தேங்காயை நன்றாக சுத்தம் செய்து, அதன் கண் வழியாக துளையிட்டு சர்க்கரை, ஏலக்காய், பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நெருப்பில் சுடுவார்கள். தேங்காயின் கண்ணில் அழிஞ்சில் மரக்குச்சியால் குத்தி நெருப்பில் சுடுவார்கள். அதை கடவுளுக்கு படைத்து பூஜை செய்து தேங்காயை பிரசாதமாக சாப்பிடுவார்கள்.


Next Story