தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சிறுதானியங்கள் சாகுபடி


தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சிறுதானியங்கள் சாகுபடி
x

சிறுதானிய சாகுபடிக்கு தமிழ்நாட்டில் தனி மவுசு கிடைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் ஆகியவை உருவத்தில் சிறியதாக உள்ள தானிய வகைகளாக இருப்பதால், அவைகளை சிறுதானியங்கள் என்று அழைக்கிறோம். இதில் சோளம், கம்பு சிறுதானிய பயிர்களாகவும், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி குறுதானியப் பயிர்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மிகக்குறுகிய காலத்தில் சாதாரண மண்ணிலும், வறட்சி காலத்திலும் கூட வளரக்கூடியவை.

இந்தியாவில் அரிசி, கோதுமை மட்டுமே முக்கிய உணவுப் பொருட்களாக இருக்கின்றன. இதில் பெரும்பாலும் மாவுச்சத்துகளே இருக்கின்றன. புரதம், நார்ச்சத்து உணவுப்பொருட்கள் இல்லாததால், மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும் பல நோய்களுக்குள்ளாகின்றனர்.

ஆர்வம்

இதனைத் தடுக்கவும், உடல் நலத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்காததும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும், கெட்ட கொழுப்புகளை குறைப்பதும், இதய நோய்களை தடுப்பதுமான சிறுதானியங்களை உணவுப்பழக்கத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வளவு மகத்துவம் கொண்ட சிறுதானியங்களின் உற்பத்தி பரப்பளவு குறைந்து கொண்டே வருவதாகவும், இதனை அதிகப்படுத்த ஏதுவாகவும் இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக இந்தியா வலியுறுத்தியபடி, ஐ.நா. சபை அறிவித்து இருக்கிறது. அதன்படி, சிறுதானிய சாகுபடியிலும் இந்தியா அதிகக் கவனம் செலுத்தத்தொடங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சிறுதானிய சாகுபடி செய்வதற்கு நிறைய வாய்ப்புகளும், வசதிகளும் உள்ளதாக இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக்கழக ஊட்டச்சத்து மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது சிறுதானிய சாகுபடியில் விவசாயிகளும் பலர் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இதனால் சிறுதானிய சாகுபடிக்கு தமிழ்நாட்டில் தனி மவுசு கிடைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

சாகுபடி

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், மக்காச்சோளம் அதிக பரப்பளவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, 3.69 லட்சம் ஹெக்டேர் பரப்பில் 30.48 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

அதற்கடுத்தபடியாக சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, வரகு, தினை மற்றும் இதர சிறு தானியங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்தத்தில் சிறுதானியங்கள் சராசரியாக 8.94 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 31.35 லட்சம் டன் உற்பத்தி கொண்டு சாகுபடி செய்யப்படுவதாக வேளாண்மை-உழவர் நலத்துறை மானியக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வரும் ஆண்டில் இதன் பரப்பளவையும், உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல் திட்டங்களை வேளாண் துறை முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்

கண்ணுக்குத்தெரியாத நுண்கிருமிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சத்தான உணவுகளை உட்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தி வருவதால், மக்கள் பலரும் நவீன கால உணவு முறைகளை தவிர்த்துவிட்டு பாரம்பரிய உணவுகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கி இருக்கின்றனர். அதுவும் சிறுதானிய உணவு வகைகளை பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுவும் சிறுதானிய சாகுபடிக்கு விவசாயிகளை ஈர்த்தது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், சிறுதானியத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது. தினை அரிசி பாயாசம், தினை மாவு உருண்டை, கேழ்வரகு மிக்சர், பிஸ்கெட், முறுக்கு, ரொட்டி, கம்பு களி, சிறுதானிய கொழுக்கட்டை மிக்ஸ், பனிவரகு உப்புமா உள்பட பல்வேறு பொருட்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

பயிற்சி

அந்த வகையில் சிறுதானியத்தின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் பற்றிய பயிற்சியும் மகளிர், வேலையில்லா பட்டதாரிகள், நகரவாசிகள், விவசாயிகள், மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள், தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் வழங்கி வருகிறது.

இந்தப்பயிற்சியை தோட்டக்கலைத்துறை பேராசிரியர் அசோக், பயிர் நோயியல் துறை உதவிப்பேராசிரியர் மாலதி ஆகியோர் வழங்கி வருகிறார்கள். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு 044-29530048 என்ற தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


Next Story