கவர்னர் என்பவர் அவ்வளவு அதிகாரம் உள்ளவரா?- பதில் அளிக்கிறார் பேனா மன்னன்


கவர்னர் என்பவர் அவ்வளவு அதிகாரம் உள்ளவரா?- பதில் அளிக்கிறார் பேனா மன்னன்
x

அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.

கேள்வி: மணிப்பூர் கலவரம் பற்றி? (ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி)

பதில்: இந்திய மக்கள் தலைகுனிய வேண்டிய தேவையற்ற கலவரம்.

கேள்வி: 2024-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகிறாரே...

(ஆர்.அருண்குமார், புதுச்சேரி)

பதில்: காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு ரத்து சரி... வராவிட்டால்?

கேள்வி: சில மாநிலங்களில் முதல்வர் - கவர்னர் இடையேயான உறவு சுமூகமாக இல்லையே, ஏன்? (வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு)

பதில்: தமிழ்நாடு, பஞ்சாப், தெலுங்கானா உள்பட பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தான் சுமூகமாக இல்லை.

கேள்வி: ஒருவழியாக கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டார்களே? (மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்)

பதில்: ஆனால் தேவைக்கேற்பவும், தரவேண்டியதற்கேற்பவும் தரவில்லையே.

கேள்வி: மனைவிக்கு முதலில் ஹீரோவாக தெரியும் கணவன், பிறகு வில்லனாக தெரிவது ஏன்? (எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்)

பதில்: எந்த மனைவிக்கும், கணவன் கதாநாயகனாகவே நீடிப்பதில்லை.

கேள்வி: பாப்பா என்ற சொல் ஆண் பாலா, பெண் பாலா? (ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு)

பதில்: நிச்சயமாக அது பெண்களுக்குரிய பாச பெயர். குழந்தைகளையும், காதல் மற்றும் அன்புக்குரிய பெண்களையும் அழைக்கும் நேசப்பெயர்.

கேள்வி: ஆணுக்கு ஓட்டுப்போடும் வயது 18. திருமணத்துக்கு மட்டும் 21 ஏன்? (பாரதி சுந்தர், குறண்டி)

பதில்: எந்த அலையன்ஸ் பார்ட்டி நல்லது என்பதைவிட, யாருடன் அலையன்ஸ் பேசுவது என்பதற்கு முதிர்ச்சி அவசியம்.

கேள்வி: காவல்துறை - பொதுமக்கள் இடையே அன்பான அணுகுமுறை சாத்தியம்தானா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

பதில்: நிச்சயமாக சாத்தியம்தான். அதுதான் இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்று. அன்பினால் சாதிக்க முடியாதது உலகில் எதுவும் இல்லை.

கேள்வி: சந்திரயான்-3 வெற்றி யாருக்கு சமர்ப்பணம்? (தே.மாதவராஜ், கோவை)

பதில்: இஸ்ரோ விஞ்ஞானிகளால் கிடைத்த இந்த வெற்றி இந்தியாவுக்கு சமர்ப்பணம்.

கேள்வி: இந்தியர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வாழ்வது ஆரோக்கியமான விஷயமா? (பி.ஜெயபிரகாஷ், அரண்மனைபுதூர், தேனி)

பதில்: அந்த நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்களே... இது பெருமையில்லையா?

கேள்வி: வாழ்க்கையில் ஒருவர் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... (எஸ்.நவீன்சுந்தர், முத்தரசநல்லூர், திருச்சி)

பதில்: நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது.

கேள்வி: எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் பட்டம் வழங்கியிருக்கிறார்களே... (எம்.நிர்மலா, புதுச்சேரி)

பதில்: அது அவர்கள் கட்சி விவகாரம். 'புரட்சி தலைவர்' எம்.ஜி.ஆர்., 'புரட்சித்தலைவி' ஜெயலலிதா, 'புரட்சி தமிழர்' எடப்பாடி பழனிசாமி. இது எப்படி இருக்கு...

கேள்வி: இந்தியா கூட்டணிக்கும், மோடி கூட்டணிக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி-தோல்வி எப்படி? (சா.சுயம்பிரகாசம், கொரட்டூர், சென்னை)

பதில்: அது வாக்காளர்களாகிய நாம் போடப்போகும் ஓட்டுகளில் தான் இருக்கிறது.

கேள்வி: தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை பெருகி வருவது இழப்புதானே... அல்லது அரசுக்கு வருமானம் கூடுகிறது என எடுத்துக்கொள்ளலாமா? (வசீகரன், தேனாம்பேட்டை, சென்னை)

பதில்: கள்ளச்சாராயத்தை தடுப்பதற்காக மதுவை விற்பனை செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. பிற நாடுகளில் சமூக ரீதியாக மது அருந்துபவர்களே அதிகம். ஆனால் நம் நாட்டில் போதை தலைக்கேறும் வரை குடிப்பதுதான் பிரச்சினை.

கேள்வி: கவர்னர் என்பவர் அவ்வளவு அதிகாரம் உள்ளவரா? (பிரணவம், கான்சாபுரம்)

பதில்: அதிகாரம் பலூன் போன்றது. அதை ஊதுவதை பொறுத்து தான் பெரிதாகவோ, சிறிதாகவோ தெரிகிறது.


Next Story