சிறுதானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை


சிறுதானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை
x

மக்காச்சோளம் உற்பத்தி திறனில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதுதவிர என்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தியில் தமிழகம் டாப் 1-ல் இருக்கிறது. சிறுதானிய உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் அசத்தி வருகிறது.

உலக மக்களின் நலனை கருதி ஐ.நா. சபை, ஒவ்வொரு ஆண்டையும் ஒவ்வொரு நோக்கத்துக்கான ஆண்டாக அறிவித்து, அதை நிறைவேற்ற ஆண்டு முழுவதும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் 2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

சிறு தானியங்கள் என்பது குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்ற சிறிய தானியங்களை குறிக்கும். இவை, மிக குறுகிய காலத்தில் சாதாரண மண்ணில் வறட்சி காலத்திலும் எளிதில் வளரக்கூடியவை ஆகும். சிறு தானியங்களில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.

2023-ஆம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்திருப்பது, உணவுச்சந்தையில் சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பதுடன், அதனை பதப்படுத்துவதற்கும், சுழற்சி முறை பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமையும் என மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானியங்களில் இடம்பெற்றுள்ள ஊட்டச்சத்து நிறைந்த தானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டங்கள், 14 மாநிலங்களின் 212 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் போன்ற சிறுதானியங்களும், வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற குறு தானியங்களும் சராசரியாக 8.94 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. 31.35 லட்சம் டன் அளவில் உற்பத்தியும் நடந்து வருகிறது. இதில் மக்காச்சோளம் மட்டுமே 28.27 லட்சம் டன் அளவில் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. சோளம் 3.62 லட்சம் டன்னும், கேழ்வரகு 2.27 லட்சம் டன்னும், கம்பு 1.46 லட்சம் டன்னும், சாமை 0.18 லட்சம் டன்னும், வரகு 0.04 லட்சம் டன்னும், தினை 0.01 லட்சம் டன்னும் என உற்பத்தி நடைபெறுகிறது.

தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் தமிழகத்தில் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் மூலமாக சிறுதானியங்களின் பரப்பை அதிகரித்து, அதன் உற்பத்தியையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்கும் நோக்கத்தில் பயன்பாடற்ற நிலங்கள் மற்றும் வளம் குறைவான நிலங்கள் மேம்படுத்தப்படுகிறது. மேலும் உரிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கிடைக்க செய்வதின் மூலமாக உயர் விளைச்சல் அடைந்திடவும் முடிகிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையை கிடைக்க செய்து, வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டத்தின் உட்கூறுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டம் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மட்டும் கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.29.56 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டது. நடப்பு ஆண்டில் இத்திட்டம் அப்படியே தொடருகிறது. குறிப்பாக மக்காச்சோளம் உற்பத்தியில் மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. மக்காச்சோளத்தை பொறுத்தவரையில் இத்திட்டமானது 9 மாவட்டங்களில் ரூ.1.60 கோடி நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இதற்கான நிதி ரூ.1.63 கோடியாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

அந்தவகையில் மக்காச்சோளம் உற்பத்தி திறனில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதுதவிர என்ணெய் வித்துகள், நிலக்கடலை, கரும்பு உற்பத்தியில் தமிழகம் டாப் 1-ல் இருக்கிறது. அரிசி உற்பத்தியில் 2-ம் இடமும், தென்னை உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. ஊட்டச்சத்து தானியங்களான கேழ்வரகு, கம்பு, வரகு, தினை உற்பத்தியில் 4-ம் இடத்தில் இருக்கிறது. அந்தவகையில் சிறுதானிய உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் அசத்தி வருகிறது.

இதுதவிர பயறு வகை பயிர்கள் மண்வளத்தை பெருக்குவதில் முக்கிய பங்காற்றுவதுடன், மனிதர்களுக்கு தேவையான புரதச்சத்தை அள்ளி வழங்குகிறது.

துவரை, உளுந்து, பச்சைப்பயறு, கொள்ளு ஆகியவை தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய பயறுவகை பயிர்கள் ஆகும். இவை தமிழகத்தில் சராசரியாக 8.17 லட்சம் ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்டு, 5.22 லட்சம் டன் அளவில் உற்பத்தி கையாளப்படுகிறது.

பயறுவகை பயிர்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் சார்பில் ரூ.42.66 கோடி மதிப்பீட்டிலும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்கள் சார்பில் ரூ.27.8 கோடி மதிப்பீட்டிலும் பயறு வகை உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நிலத்தடி நீர்மட்டம், பயிர் சாகுபடி பரப்பு ஆகியவற்றை அதிகரிப்பதில் உள்ள இடர்பாடுகளை நீக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி இருக்கிறது. அதேவேளை புதிய தொழில்நுட்பங்களை பெருவாரியான பரப்பளவில் கடைபிடித்து, நுண்ணீர் பாசனத்துடன் பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழலை உருவாக்கி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்திட வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.


Next Story