பேனா மன்னன் பதில் சொல்கிறார்


பேனா மன்னன் பதில் சொல்கிறார்
x

கேள்வி:- 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம் என்கிறாரே, அன்புமணி ராமதாஸ்? (சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி)



பதில்:- ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இப்படித்தான் சொல்கிறார். தன் கூட்டணியை சொல்கிறாரோ என்னவோ!

கேள்வி:- ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் பா.ஜ.க. தான் காரணம் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாரே? (எம்.நிர்மலா, வாணரப்பேட்டை)

பதில்:- அது அவரது கருத்து. பதில் சொல்லவேண்டியது பா.ஜ.க.

கேள்வி:- தமிழ்நாட்டில் ராமராஜ்ஜியம் அமைக்க ஆர்.எஸ்.எஸ். துடிப்பது போல், வடநாட்டில் திருச்செந்தூர் முருகன் ராஜ்ஜியம் அமைப்பேன் என்று நான் சொன்னால் விடுவார்களா? என்று முன்னாள் எம்.எல்.ஏ. தனியரசு கேட்டிருப்பது? (பா.ஜெயபிரகாஷ், அரண்மனைபுதூர், தேனி)

பதில்:- சபாஷ்! சரியான கேள்வி.

கேள்வி:- காதலியை கொண்டாடும் ஆண்கள், மனைவியை கொண்டாடுவதில்லையே, ஏன்? (எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்)



பதில்:- காதலி மரத்தில் தொங்கும் கனி. மனைவி மடியில் விழுந்த கனி.

கேள்வி:- டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாய்மொழி தமிழிலேயே தோல்வி அடைந்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்? (நேசமணி, தர்மபுரி)

பதில்:- தமிழ்நாட்டில் வேலைபார்க்கும் பிற மாநிலத்தவர்களுக்கு தமிழ் தெரியவேண்டும் என்கிறோம். நம்மவர்கள் தமிழில் தேர்ச்சி அடையவில்லை என்றால் பெரும் அதிர்ச்சி தான்.

கேள்வி:- எனது காதலி அவளது கனவுக்காக என்னை விட்டுச் சென்றுவிட்டாள், ஆனால் அவளுடைய கனவுக்கு ஒருபோதும் நான் தடையாக இருந்ததில்லை. நான் கெஞ்சியும் அவள் வரவில்லை. இது என்னுடைய தவறா? (பிரதாப், திருச்சி)

பதில்:- உண்மையான காதல் போல தெரியவில்லை. `போனால் போகட்டும் போடா' என்று விட்டுவிடுங்கள்.

கேள்வி:- எதை ஆராய்ந்து பார்க்காமல் செய்யலாம், எதனை செய்யக்கூடாது? (கே.ஆர்.உதயகுமார், சென்னை-1)

பதில்:- நம் முன்னோர்கள் அறம் என சொன்னவற்றை அப்படியே பின்பற்றலாம். எவற்றை தீயவை என்று சொன்னார்களோ, அவற்றைத் தீண்டாமல் இருப்பதே நல்லது.

கேள்வி:- மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்தால் பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்படுமா? (பாலு, கொளத்தூர்)

பதில்:- அப்படி ஒரு நிலைமை வேண்டாம். வரவும் தமிழக அரசு விடாது.

கேள்வி:- எனக்கு தெரிந்த ஒரு விதவைப் பெண் மீது என் மனம் நாடுகிறது. எப்படி அதை தெரிவிப்பது? (எஸ்.ராஜசுப்பிரமணியம், நாகர்கோவில்)

பதில்:- `வேரில் பழுத்த பலா கோரிக்கையற்று கிடக்குதண்ணே...' என்று நினைக்காமல், உண்மையாக விரும்பினால் அந்த பெண்ணின் பெற்றோரிடம் முறையோடு போய் கேளுங்கள். வாழ்த்துக்கள்.

கேள்வி:- அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளாரே? (ராம் சந்தர், கும்பகோணம்)



பதில்:- அரசியலில் அதை இப்போதுதானே சொல்கிறார். இப்படி சொல்வதெல்லாம் சகஜம்.

கேள்வி:- மனிதன் பொன், பொருளுக்கு ஆசைப்படுவது ஏன்? (மு.நாகூர், சுந்தரமுடையான்).

பதில்: இந்த ஆசை இப்போது அல்ல, பழங்காலத்திலேயே இருந்து இருக்கிறது.

கேள்வி:- வீட்டு வாடகை, ஊழியர்களின் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள், என்ற அண்ணாமலையின் பேச்சை எப்படி பார்க்கிறீர்கள்? (ஜெ.கிருஷ்ணதேவு, மதகடிப்பட்டு, புதுச்சேரி)



பதில்:- நமக்கு இப்படி நண்பர்கள் கிடைக்கவில்லையே என்று ஏங்க வைக்கிறது.

கேள்வி:- தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திகழும் அ.தி.மு.க. நடத்தும் போராட்டங்களை விட, அவர்களின் கூட்டணி கட்சியான பா.ஜ.க. அதிகமாக போராட்டம் நடத்துகிறது. என்ன நோக்கத்தில் பா.ஜ.க. இவ்வாறு செயல்படுகிறது? (பி.சுப்புலட்சுமி, கோயம்புத்தூர்)

பதில்:- "அந்த இடத்தை" பிடிக்க வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம்.

கேள்வி: பேனா முனை, ஏர்முனை எது சக்தி வாய்ந்தது? (ப.ராமகிருஷ்ணன், அறந்தாங்கி).


பதில்:- அறிவுப் பஞ்சத்தை போக்க பேனா முனையும், உணவுப் பஞ்சத்தை போக்க ஏர்முனையும் சக்தி வாய்ந்தது.

கேள்வி:- எதனை வாழ்க்கையின் வரம் என்பீர்கள்?. (பாலகிருஷ்ணன், வாணியம்பாடி).

பதில்:- அன்பான மனைவி, தொல்லை இல்லா பிள்ளைகள், போதுமான வருமானம், நல்ல உடல்நலம்தான் வாழ்க்கையின் வரம்.


Next Story