அதிக வருவாய் தரக்கூடிய தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க பயிற்சி


அதிக வருவாய் தரக்கூடிய தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க பயிற்சி
x
தினத்தந்தி 15 Jun 2023 1:00 PM GMT (Updated: 15 Jun 2023 1:00 PM GMT)

தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க கிண்டி வேளாண்மை பல்கலைக்கழக மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தேனீக்கள் வளர்ப்பு

தேனீக்கள் மனித குலத்துக்கு பல்வேறு பாடங்களை கற்றுக்கொடுக்கும் உயிரினமாக இருக்கிறது. கடமை உணர்வு, அசையாத உழைப்பு, தலைமைக்கு தலை வணங்கும் பண்பு, ஒற்றுமை, கூட்டுறவு, தொலைநோக்குப் பார்வை, சிக்கனம், சேமிப்பு, சமுதாய ஒழுங்கு மற்றும் பிறர்நலன் பேணுதல் போன்ற அவற்றின் பண்புகளை நம்முடைய அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேற முடியும். இது பலராலும் பல இடங்களில் முன்னுதாரணமாக சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட தேனீக்கள் வளர்ப்பு நல்ல லாபகரமானதாக தற்போது இருந்து வருகிறது. விவசாயிகள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு மக்களும் தேனீக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு, அதன் மூலம் தேன் உற்பத்தி செய்ய முடியும். இதனால் தமிழ்நாடு அரசு தற்போது தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறது. அதற்கேற்றாற்போல், பல்வேறு பயிற்சிகளும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் வழங்குகிறது.

அடுக்குத் தேனீக்கள்

பொதுவாக, தேனீக்களின் வகைகளை பார்க்கும் போது, மலைத் தேனீ, கொம்பு தேனீ, கொசுத் தேனீ, இந்தியத் தேனீ, இத்தாலியத் தேனீ ஆகியவை இந்தியாவில் இருந்து வருகின்றன. இதில் மலை மற்றும் கொம்புத் தேனீக்கள் வளர்ப்பதற்கு ஏற்ற சூழலில் இருக்காது. அவை அனைத்தும் மலைப் பகுதிகளிலும், உயரமான இடங்களிலும் கூடுகட்டி வாழ்கின்றன.

மேற்சொன்ன வரிசையில் ஆசியத் தேனீ இனத்தை சேர்ந்த சிற்றினமான இந்திய தேனீக்கள் வளர்ப்பு தேனீக்களாக இருக்கின்றன. இவை அடுக்குத் தேனீ, வங்கு தேனீ, பொந்து தேனீ, புற்று தேனீ என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான தேனீக்கள் மரப்பொந்துகள், புற்றுகள், வங்குகள், பாழடைந்த கிணற்றுச்சுவர்கள், குழாய்கள், பானைகள் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து அடுக்குகளாக கூடுகட்டி வாழக்கூடியவை. சாந்த குணம் படைத்த இந்த வகை தேனீக்கள் தான், தேனீ வளர்ப்புக்கு ஏற்ற இனமாக உள்ளன.

பெட்டிகளில் வளர்க்க முடியும்

தேனீ வளர்ப்பை வெற்றிகரமாக மேற்கொள்ள வேண்டும் என்றால், தேனீக்களை பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று என்றும், அவ்வாறு தெரிந்த பிறகு, தேனீக்கள் வளர்ப்பை சிறிய அளவில் தொடங்குவதே சரியானதாக இருக்கும் என்றும், இதன் மூலம் போதிய பயிற்சியும், அனுபவமும் பெற்று சாதகமான சூழ்நிலை இருக்கும் இடங்களில் வணிக ரீதியில் தேனீ வளர்ப்பை தொடங்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்சொல்லப்பட்ட அடுக்குத் தேனீ இனங்களை மட்டுமே செயற்கை முறையில் பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியும் என்பதால், அந்த வகையான தேனீக்களை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். அதற்கேற்ற இடங்களை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். தேனீக் கூட்டங்கள் எங்கெங்கு இயற்கையில் அதிகமாக காணப்படுகின்றதோ, அந்த இடங்களில் தேனீக்கள் வளர்ப்பை மேற்கொள்வது சரியாக இருக்கும். தேனீக்களுக்கு தூய்மையான தண்ணீர் அவசியமான ஒன்று என்பதால், தேனீ வளர்ப்புக்கு தேர்வு செய்யப்படும் இடங்களுக்கு அருகில் கிணறு அல்லது வாய்க்கால் இருப்பது நல்லது.

தூய்மையான தேன்

தேனீ வளர்ப்புக்கு மிக முக்கியமான சாதனம் தேனீ பெட்டிகள் ஆகும். அடுக்குத் தேனீக்களை மட்டுமே செயற்கை முறையில் மரச்சட்டங்களுள்ள பெட்டிகளில் வைத்து வளர்க்கலாம். ஒவ்வொரு மரச்சட்டத்திலும், ஒரு மேல் கட்டை, ஒரு அடிக்கட்டையுடன் இரண்டு பக்க கட்டைகளால் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் பெட்டிகளில் தேனீக்கள் அடுக்கடுக்காக தேன் அட்டைகளை கட்டும்.

அதிலும் குறிப்பாக தேனீ வளர்ப்பதற்கான பெட்டிகளை நிழலில், கிழக்கு பார்த்தபடி வைக்க வேண்டும். ஏனென்றால் காலை வெயில் அந்த பெட்டியின் மீது படும்போது, தேனீக்கள் தங்கள் பணியை தொடங்கும். பொதுவாக இந்திய தேனீக்கள் 7 சட்டங்கள் கொண்ட நியூட்டன் பெட்டிகளிலும், 8 சட்டங்கள் கொண்ட ஐ.எஸ்.ஐ. பெட்டிகளிலும் வளர்க்கப்படுகின்றன. அவ்வாறு வளர்க்கப்படும் தேனீக்களில் இருந்து பெறப்படும் தேன்களை உருளை வடிவிலான ஒரு கருவி கொண்ட பாத்திரம் மூலம் எடுக்கலாம். அப்படி எடுப்பதால் தூய்மையான தேனை பெற முடியும்.

பயிற்சி

இப்படியான தேனீக்கள் வளர்ப்பு மூலம் அதனால் கிடைக்கும் தேனை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்ட முடியும். தற்போது விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் வருவாய் தரக்கூடிய தொழிலாகவும் தேனீக்கள் வளர்ப்பு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு தேனீக்கள் வளர்ப்பு குறித்த பயிற்சியை அதிகளவில் மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் சென்னை கிண்டியில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சியானது வழங்கப்படுகிறது. பயிற்சியில் தேனீக்கள் வளர்ப்பு முறையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும்? அதற்கான சாதகமான சூழலை உருவாக்குவது எப்படி? தேவையான உணவுகள் தேவைப்படும்போது வழங்குவது எப்படி? தேனை எடுப்பது எப்படி? என்பது உள்பட பல்வேறு தகவல்கள் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சியில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்பவர்களுக்கு பயிற்சியை, தோட்டக்கலைத் துறை பேராசிரியர் அசோக், பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் மாலதி ஆகியோர் வழங்குகின்றனர்.


Next Story