தக்காளி சாகுபடியில் அதிக மகசூல் பெற உதவும் வழிகள்


தக்காளி சாகுபடியில் அதிக மகசூல் பெற உதவும் வழிகள்
x
தினத்தந்தி 15 Jun 2023 1:30 PM GMT (Updated: 15 Jun 2023 1:30 PM GMT)

வீடுகளில் சிறு தொட்டிகளிலும், தோட்ட பயிராகவும் தக்காளி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தக்காளி பயிரிடும் நுட்பங்களை சரியாக கடைபிடிக்கும்போது அதிக மகசூல் பெறலாம்.

மண்ணின் தன்மை

பொதுவாக, மண்ணின் கார அமிலத்தன்மை 6 முதல் 7 வரை இருந்தால், தக்காளி நன்கு வளரும். இது வெப்பமண்டல பயிரும்கூட. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கோ-2, கோ-3 (மருதம்), பி.கே.எம்.-1, பையூர்-1, பூசா ரூபி, பூசா கவுரவ், அர்கா விகாஸ் உள்பட 15-க்கும் மேற்பட்ட ரகங்களும், பஞ்சாப் சுகார அர்கா சுரப் ரகங்கள் பயிரிட ஏற்றவை.

நாற்றங்கால்

தக்காளி பயிரானது நாற்றங்காலில் நாற்றுவிட்டு, பின்னர் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்படும் வகையை சேர்ந்தது. தக்காளி நாற்றங்கால் அமைக்க 1 மீட்டர் அகலம், 15 செ.மீ உயரம் மற்றும் தேவையான அளவு நீளம் கொண்ட பாத்திகளை அமைக்க வேண்டும். இந்த பாத்திகளை தொழு உரம், மணல் மற்றும் செம்மண் கலந்து தயாரிக்க வேண்டும். இதனையடுத்து, பாத்தியில் விதைகளை வரிசையாக விதைக்க வேண்டும். விதைப்புக்கு பின்பு லேசான மணல் அல்லது தொழுஎரு இட்டு மூடி காய்ந்த இலைகளை பயன்படுத்தி மூட்டம் போட்டு பூவாளியின் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைத்த 7 முதல் 10 நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும்.

நீர் பாய்ச்சல்

நாற்று நட்டவுடன் உடனடியாக நீர் பாய்ச்சுதல் வேண்டும். பின்பு நட்ட 3-வது நாள் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பிறகு ஈரப்பதத்தை பொறுத்து 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் அவசியம். நடுவதற்கு முன்பாக களைக்கொல்லி பேசலின் 2 லிட்டர் மருந்தை ஒரு ஹெக்டேர் நிலத்தில் தெளிப்பதால் களை வளர்வது கட்டுப்படுத்தப்படுகிறது. வயலில் நாற்றுநட்ட 30 முதல் 35 நாள் கழித்து களை எடுத்து மேலுரம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

கால்சியம் குளோரைடு 0.1 சதவீத கரைசலை பூப்பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதால் காய்கள் நன்றாக வளர்வதுடன் பழம் வெடிக்காமல் இருக்கும். தக்காளியின் சராசரி சாகுபடி காலம் என்பது 120 முதல் 150 நாட்கள் ஆகும். நாட்டு ரகங்களில் இருந்து ஹெக்டேருக்கு 20 முதல் 35 டன் மகசூலும், வீரிய ஒட்டு ரகங்களில் இருந்து 60 முதல் 80 டன் பழங்களும் மகசூலாக கிடைக்கும்.

தக்காளி விளைச்சலை பொறுத்து விலை குறைவாகவும், சில நேரங்களில் எதிர்பாராத வகையில் விலை அதிகமாகவும் இருப்பது வழக்கம். எனவே, தக்காளி விலை குறைவாக இருக்கும்போது ஊறுகாய், ஜாம் உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம்.


Next Story