ஏற்காடு தங்கமலை ரகசியம்


ஏற்காடு தங்கமலை ரகசியம்
x

சேலம் மாவட்டம், சேர்வராயன் மலைத்தொடரில் கண்ணுக்கினிய அழகு, இதமான வானிலையுடன், பசுமையான கரங்களை நீட்டி சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்து கொண்டிருக்கிறது ஏற்காடு.

ஊட்டியை 'மலைகளின் அரசி' என்றும், கொடைக்கானலை 'மலைகளின் இளவரசி' என்றும் அழைப்பது போல, ஏற்காட்டை 'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கிறார்கள். ஏற்காட்டிற்கு 'ஏழு காடுகளின் நிலம்' என்ற பெயரும் உண்டு. ஏரிக்கரையில் அமைந்திருப்பதால், முதலில் 'ஏரிக்காடு' என்று வழங்கி பிறகு 'ஏர்க்காடு' என அழைக்கப்பட்டு, நாளடைவில் 'ஏற்காடு' என மாறியதாக கூறுகிறார்கள்.

ஏற்காடு கடல் மட்டத்தில் இருந்து 1,515 மீட்டர்(4,969அடி) உயரத்தில் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதன் மலைப்பாதையில் 20 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஏற்காட்டில் சராசரியாக 28 டிகிரி செல்சியசுக்கு மேலும், 9 டிகிரி செல்சியசுக்கு கீழும் வெப்பநிலை இருந்ததில்லை. மிதமான தட்பவெப்பநிலையே நிலவுவதால் ஏற்காட்டுக்கு எப்போதும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

தங்க வேட்டை

சேலம் மாவட்டத்தில் உயரத்திலும், வளத்திலும் சிறந்தது சேர்வராயன் மலைகள். மல்லாபுரம் மலைத்தொடருக்கும் மஞ்சவாடிக் கணவாய்க்கும் இடையில் இம்மலைகள் பரந்து விரிந்து கிடக்கின்றன.சேர்வராயன் மலைப்பகுதியில் ஏராளமான கனிம வளங்களும், இரும்பு தாதுக்களும் நிறைந்து உள்ளன. மேலும் இங்கு தங்கமும் உள்ளதாக ஆங்கிலேயர்கள் நம்பினார்கள். அதற்காக பல ஆண்டுகள் தங்க சுரங்க வேட்டையும் நடத்தி உள்ளனர். பல ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்தில் நடந்த இந்த தங்க வேட்டை குறித்து சேலம் வரலாற்று ஆய்வாளர் கே.ஜி.சிவா கூறியதாவது:-

கைவிட்ட கஞ்சமலை

சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலையில் இரும்புத்தாது அதிகமாக இருப்பது போல தங்கமும் உள்ளதாக கொங்கு மண்டல சதகம் பாடல் 29-ல் கூறப்பட்டு இருக்கிறது. கஞ்சம் என்ற சொல்லுக்கு 'பொன்' என்ற பொருள் உண்டு. எனவே கஞ்சமலைக்கு அருகில் ஓடும் ஆறு 'பொன்னி நதி' என்று அழைக்கப்பட்டது.

பண்டைய காலத்தில் மழைக்காலங்களில் கஞ்சமலையிலிருந்து அடித்து வரப்படும் நீரானது பொன்னி ஆற்றில் கலக்கும். அந்த நதி மணலை கரைத்து பொன் எடுத்தனர் என கொங்கு மண்டல சதகம் கூறுகிறது.

1800-ம் ஆண்டு காலகட்டங்களில் சேலத்தின் கனிம வளங்களை அறிந்த ஆங்கிலேயர்கள் அவற்றை தேடும் வேட்டையை தொடங்கினர். பிரசித்தி பெற்ற கஞ்சமலை இரும்பு, மாமாங்கம் மேக்னசைட் போல தங்கமும் இருப்பதாக அவர்கள் நம்பினர். எனவே கஞ்சமலையில் தங்கத்தை தேடதொடங்கினர். ஆனால் கஞ்சமலை அவர்களை கைவிட்டு விட்டது.

இங்கிலாந்து அரசுக்கு அறிக்கை

இதையடுத்து ஆங்கிலேயர்களின் பார்வை சேர்வராயன் மலைகள் மீது திரும்பியது. ஏற்காடு மலையில் இருக்கும் இரட்டை வெள்ளை யானை பாறைகள் அவர்களது தங்க ஆர்வத்தை மேலும் அதிகமாக்கியது. காரணம், பசுமைக்கு சம்பந்தமே இல்லாமல் இருந்த ஆண் வெள்ைள யானை பாறை, பெண் வெள்ளை யானை பாறை ஆகியவை அவர்களது ஆர்வத்தை மேலும் தூண்டியது.

1832-ம் ஆண்டு ஆங்கிலேயரான கிளையன்ட் நிக்கல்சன் சேர்வராயன் மலைப்பகுதிகளின் கனிம வளங்களை பரிசோதித்து இங்கிலாந்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் பின்னர் 1864-ல் ராபர்ட் புரூஸ்பூட், வில்லியம் கிங் ஆகியோரும், 1892-ம் ஆண்டு டி.எச்.ஹாலன்ட் என்பவரும் இந்த பாறைகளில் தங்கம் கிடைக்குமா என ஆராய்ந்தனர்.

தகர்ந்தது தங்க கனவு

இதுதொடர்பாக அவர்கள் 1881-ம் ஆண்டைய சேலம் மாவட்ட கெசட்டிலும், 1896-ம் ஆண்டு 'மெமரிஸ் ஆப் தி ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா' என்ற நூலிலும் பதிவு செய்துள்ளனர். வெள்ளை யானை பாறைகள் மிகப்பெரிய பளிங்குக்கல் பாறைகள் என்பதாலும், பால் போன்ற நிறமும் அதில் இருந்த கனிமங்களின் சேர்க்கையும் அவர்களது தங்க கனவை அதிகப்படுத்தியது.

மேலும் அதே காலகட்டத்தில், அமெரிக்காவின் வெர்ஜினியா, கிழக்கு ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் வெள்ளை பளிங்கு பாறைகளில் இருந்து தங்கம் எடுக்கப்பட்ட நிகழ்வுகள், அவர்களது தங்க ஆசையை இன்னும் தூண்டியது. இதையடுத்து வெள்ளை யானை பாறையில் கிணறு போல சுரங்கம் தோண்டப்பட்டு தங்க வேட்டை நடத்தப்பட்டது. இதற்காக 1890-ம் ஆண்டு கனிமங்கள் சர்வே மேப் எடுக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக நடந்து வந்த தங்கவேட்டையின் முடிவில் ஆங்கிலேயர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்களது தங்க கனவு தகர்ந்தது. அங்கு தங்கம் எதுவும் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. எனவே. அவர்கள் சுரங்கம் தோண்டுவதையே விட்டுவிட்டனர்.

இதுபற்றி இங்கிலாந்து அரசுக்கு தங்கம் கிடைக்கவில்லை(நோ கோல்டு) என அறிக்கை அனுப்பி வைத்தனர். ஆங்கிலேயர்கள் தங்கவேட்டைக்காக தோண்டிய குகை போன்ற பெரிய குழி இன்றும் வெள்ளை யானை பாறையில் காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரிய கனிம பொருட்கள்

சேர்வராயன் மலைகள் பற்றியும், அதிசய வெள்ளை யானை பாறைகள் பற்றியும் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஏற்காடு இளங்கோ கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மலைத்தொடர்கள் மண்டிக் கிடப்பதால், காடுகளுக்கு பஞ்சமில்லை. சேர்வராயன் மலைகள் மீதும் அடர்ந்த காடுகள் உள்ளன. சேர்வராயன் மலைகளில் கிடைக்கும் வெள்ளைக்கல் (மேக்னசைட்) மிகவும் உயர்ந்த ரகத்தை சேர்ந்தது. இதேபோல 'பாக்சைட்' என்னும் கனிமப் பொருள் சேர்வராயன் மலைகளில் அளவில்லாமல் கிடைக்கிறது.

கடந்த நூற்றாண்டில் ஏற்காட்டில் வாழ்ந்த ஆங்கிலேயரான டிக்கென்ஸ் என்பவர்தான் முதன்முதலாக இங்கு பாக்சைட் கிடைப்பதை கண்டறிந்தார். அரசிடமிருந்து இந்த இடத்தை சுரங்க குத்தகைக்கு எடுத்து, பாக்சைட்டை தோண்டி எடுத்தார்.

வெள்ளை யானை பாறைகள்

ஏற்காட்டில் உள்ள 'கரடி மலை' மீது நின்று பார்த்தால் இரண்டு பெரிய வெள்ளை நிற பாறைகள் தென்படும்.அதனை 'வெள்ளை யானை பாறைகள்' என்கின்றனர். இவை இரண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளன. தப்பக்காடு எனப்படும் கிராமத்தின் எல்லையை ஒட்டிய வனப்பகுதியில் ஒன்று உள்ளது. மற்றொன்று குண்டூர் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் உள்ளது.

வெள்ளை யானை பாறைகள் 'குவார்ட்ஸ்' என்னும் கனிமத்தால் ஆனவை. குவார்ட்ஸ் என்பது ெவள்ளை பளிங்கு கல்லாகும். தப்பக்காடு வனப்பகுதியில் பெரியதாக உள்ள பாறையை 'ஆண் வெள்ளை யானை பாறை' என்றும், குண்டூர் வனப்பகுதியில் சிறியதாக உள்ள பாறையை 'பெண் வெள்ளை யானை பாறை' என்றும் அழைக்கின்றனர். இந்த இரண்டு வெள்ளை யானை பாறைகளும் ஒரு புவியியல் அற்புதமாகும்.

பெண் வெள்ளை யானை பாறையில் ஆங்கிலேயர்கள் தங்க வேட்டைக்காக சுரங்கம் போன்று இரண்டு பெரிய குழிகளை தோண்டினர். தற்போது ஒரு பெரிய குழி மட்டுமே உள்ளது. பார்ப்பதற்கு பெரிய குகை போல காட்சி அளிக்கிறது. இதன் முன்புள்ள கிணறு போன்ற பகுதி எவ்வளவு ஆழம் உள்ளது? என அளக்க முடியவில்லை. இந்த வெள்ளை யானை பாறையின் அடியில் தங்கம் இருப்பதாக கருதி ஆங்கிலேயர்கள் பாறையை வெட்டிக் கொண்டே சென்றனர். ஆனால் அவர்களுக்கு குன்றுமணி தங்கம் கூட கிடைக்கவில்லை. எனவே ஒருகட்டத்தில் அவர்கள் சுரங்கம் தோண்டுவதையே விட்டு விட்டனர். இதேபோல ஆங்கிலேயரான டிக்கின்ஸ் என்பவர் இங்கு வைரம் இருப்பதாக நம்பி அவரும் சுரங்கம் தோண்ட தொடங்கினார். அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

அழகான ராணியும், அடங்காத மந்திரவாதியும்

இரட்டை வெள்ளை யானை பாறைகள்- ஆண் வெள்ளை யானை பாறை என்றும், பெண் வெள்ளை யானை பாறை என்றும் அழைக்கப்படுவதை நாம் பார்த்தோம். இந்த பாறைகள் பற்றி சுவையான மாயாஜால கதை ஒன்று மலைவாழ் மக்களிடையே இன்றும் உலவுகிறது....

"அந்த காலத்தில் சேர்வராயன் மலையை ஒரு ராணி ஆண்டு வந்தாள். அழகு தேவதையான அவள் காண்பவர் மயங்கும் கட்டழகி. ராணியின் மீது அழகான இளைஞன் ஒருவனும், மந்திரவாதி ஒருவனும் ஆசைப்பட்டனர். சூனியக்காரனான மந்திரவாதி ராணியை அடைய பல முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் அவை தோல்வியில்தான் முடிந்தன. காரணம், அந்த ராணி இளைஞனை காதலித்தாள். இதனை தெரிந்து கொண்ட மந்திரவாதி கோபமடைந்தான். அவர்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினான்.

இதனால் பயந்த ராணியும், இளைஞனும் மந்திரவாதியிடம் இருந்து தப்பிச் செல்ல முடிவு செய்தனர். இதை எப்படியோ அந்த கொடியவன் தெரிந்து கொண்டான். அவர்கள் இருவரும் மலையை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க தன்னிடம் இருந்த 2 பெரிய யானைகளை ஏவி விட்டான். யானைகள் இரண்டும் வெவ்வேறு வழிப் பாதையில் மறித்து நின்று கொண்டிருந்தன.

ராணியுடன் தப்பிச்சென்ற இளைஞனுக்கும் ஒன்றிரண்டு மந்திரங்கள் தெரியும். எனவே அவன் அந்த இரண்டு யானைகளையும் தனது மந்திர சக்தியால் உறக்க நிலையில் ஆழ்த்தினான். பின்னர் இளைஞனும், ராணியும் பத்திரமாக மலையை விட்டு தப்பிச்சென்றனர். இதையறிந்த கொடூர மந்திரவாதி தன்னுடைய யானைகள் மீது கடும் கோபமடைந்தான். தனது மந்திர சக்தியால் இரண்டு யானைகளையும் கற்களாக மாற்றினான். யானைகள் எங்கு நின்றனவோ அங்கேயே அவை கல்லாக மாறிவிட்டன." இப்படி ஒரு கதை சொல்கிறார்கள்.

இதேபோல வேறொரு கதையும் கூறப்படுகிறது. இந்த மலையை ஆளும் சேர்வராயன் சாமி ஒரு முறை ஊர்வலம் வந்தார். அப்போது அவருடன் வந்த இரண்டு யானைகளும் அவரது பேச்ைச மீறி அங்கிருந்து ஓடின.

இதனால் கோபம் அடைந்த சேர்வராயன் சாமி யானைகள் இரண்டையும் கற்களாக சபித்ததாகவும், அந்த யானைகளே தற்போது இரட்டை பாறைகளாக காட்சி அளிக்கின்றன என்றொரு கதையும் உண்டு.

ஆண் வெள்ளை யானை பாறை

கம்பீரமான சேர்வராயன் மலையின் தென்மேற்கு பகுதியில் துருத்திக் கொண்டு இருப்பதுதான் ஆண் வெள்ளை யானை பாறை. இது கடல் மட்டத்தில் இருந்து 764 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இது வெள்ளை நிறம் கொண்ட பெரிய குன்று. சுமார் 120 அடி உயரம் கொண்டது. சூரிய ஒளியில் கண்ணை கூச செய்யும் அளவிற்கு பிரகாசமானது. பார்ப்பதற்கு உருளை வடிவில் தெரியும். எனவே இதனை வெள்ளை யானை பல் எனவும் அழைக்கின்றனர்.

ஒருபுறம் பார்த்தால் இந்த பாறை யானையின் முகம் போல காட்சி அளிக்கும். இன்னொருபுறம் பார்த்தால் யானை பல் போன்று காட்சி தரும். பாறையின் பல இடங்களில் செங்குத்தான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த குன்றை சுற்றி பசுமையான தாவரங்கள் காணப்படுகின்றன. குன்றின் வெடிப்புகளில் சில தாவரங்கள் வளர்ந்துள்ளன. இந்த குன்றின் மீது ஏறுவது மிக சிரமம். இறங்குவது அதை விட சிரமம். குன்றின் மேல் பகுதியில் மலைத்தேனீயின் கூடுகள் உள்ளன. அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வடக்கயிறு கட்டி ஏறி தேனை எடுக்கின்றனர். ஏற்காட்டில் இருக்கும் 'ரெட்ரீட்' என்னும் இடத்தில் உள்ள மைதானத்தின் எல்லையில் இருந்து பார்த்தால் இந்த வெள்ளை யானை பாறை நன்றாக தெரியும். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் போல இந்த பாறை காட்சி தருகிறது. இதேபோல சேலத்தில் உள்ள டி.பெருமா பாளையத்தில் இருந்து பார்த்தாலும் இந்த வெள்ளை யானை பாறை தெரியும்.

பெண் வெள்ளை யானை பாறை

ஏற்காட்டிற்கு வாகனத்தில் செல்லும்போது இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் இருந்து பெண் வெள்ளை யானை பாறையை பார்க்கலாம். முழுக்க 'குவார்ட்ஸ்' என்னும் கனிமத்தால் ஆன ஒரு சிறு குன்று வெள்ளை வெளேர் எனக் காட்சித் தருகிறது. சூரிய ஒளியில் கண்ணாடி போல் இந்த பாறை மின்னுகிறது. இந்த பாறை சுமார் 60 அடி உயரமும், 100 அடி விட்டமும் கொண்டது. இதன் மேல் பகுதி கரடு முரடாக, குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. ஒருபுறம் பார்க்கும் போது ஒருக்கழித்து துயிலும் பெண் போல வெள்ளை வெளேரென பெண் வெள்ளை யானை பாறை காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் பாறை மேல் பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கும். அப்போது அதில் 'ஹைடிரில்லா' என்னும் நீர்த் தாவரங்கள் வளர்கின்றன. குன்றை சுற்றி வெங்கச்சாங்கல் சிதறிக் கிடக்கின்றன. பாறையின் ஓரத்தில் காளான்கள் வளர்ந்துள்ளது. அது பளிங்கு போன்ற நிறத்தில் உள்ளது. அதாவது குவார்ட்ஸ் கல்லின் நிறத்திலேயே காளானின் நிறமும் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த பெண் வெள்ளை யானை பாறையின் வடகிழக்குப் பகுதியில் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய குழி போன்ற குகை காணப்படுகிறது. முன்பு இங்கு 2 குழிகள் இருந்ததாகவும் நாளடைவில் குவார்ட்சால் அரிக்கப்பட்டு இரண்டும் ஒன்றாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. குகையின் மேலே பாறையின் ஒரு பகுதி வளைந்து நீட்டிக் கொண்டிருக்கிறது. இது 'ஹெல்மெட்' போன்ற தோற்றம் உடையது. இன்னும் சொல்லப் போனால் திறந்த சிங்கத்தின் வாய் போன்ற அமைப்பு கொண்டதாக தெரிகிறது. மேற்புறம் 15 அடி உயரம் கொண்டது. அது வளைந்து கிணற்று பகுதியுடன் முடிகிறது. குகை வாய் பகுதி நன்கு தேய்த்து மெருகேற்றியது போல், எந்தவித பள்ளமும் இல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியம்.

இருந்தாலும் ஏற்காட்டைச் சேர்ந்த பழமைவாதிகள் சிலர், அங்கே தங்கம் இருப்பதாகவே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.


Next Story